அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

படிக்கட்டில் பயணித்தால் டிஸ்மிஸ் : அரசு அறிவிப்பு


"பேருந்தின் படிக்கட்டில் தொடர்ந்து பயணிக்கும் மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து நிறுத்தப்படுவார்கள்" என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அண்மையில், சென்னை பெருங்குடியில் பேரு‌ந்து மீது சுமையுந்து (லாரி) மோதியதில் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் பலியான சம்பவம் தொடர்பாக, தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தாமாகவே முன் வந்து வழக்குப் பதிவு செய்து, இது போன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் அரசு எடுத்துள்ளது  என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் தலைமை வழ‌க்க‌றிஞ‌ர் நவநீதகிருஷ்ணன் முன் வந்து பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர்  படித்து பார்த்து "தமிழக அரசு எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் பாராட்டும்படி உள்ளது. இந்த விதிமுறைகளை இன்று முதல் நடைமுறைப் படுத்த வேண்டும். இதை நடைமுறைப் படுத்தினால் 90 சதவீத விபத்துக்களை தடுக்கலாம்" என்று பாராட்டினர்.

அரசு அளித்த பதில் மனுவில் "பேரு‌ந்தின் படிக்கட்டில் பயணம் செய்வதைத் தவிர்க்க கல்லூரிகள், பள்ளிகளில் விழிப்புணர்வு செய்யப்படும். நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் பேரு‌ந்துக‌ள் இயக்கப்படும். போக்குவரத்து விதிகளை மீறினால் வழங்கப்படும் தண்டனை விபரம் பற்றி பிரசாரம் செய்யப்படும்.

படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள் முதலில் எச்சரிக்கை செய்யப்படுவார்கள். இது பற்றி மாணவரின் பெற்றோருக்கும், பள்ளிக்கும் தகவல் தெரிவிக்கப்படும். மாணவர்கள் தொடர்ந்து பேரு‌ந்து படிக்கட்டில் பயணம் செய்தால் அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். பிறகு அவர்களை பள்ளியில் இருந்து நீக்கக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.  பின்னர்,  ஜனவரி 2ம் தேதிக்கு இவ்வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக