அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

கோடியக்கரை-அரிக்கும் புற்றுநோய்!

'தண்ணீரா... புகையிலையா...'
ராஜாளிக்காடு குமாரவேல், கோடியக்கரை அய்யாசாமி, கோடியக்காடு ராஜாமணி, கோபால், கருப்பம்புலம் அமுதா ஆறுமுகம், நெய்விளக்கு ராவுத்த தேவர், பஞ்சவர்ணம்... என்று கடந்த ஒரு மாத காலத்தில் புற்றுநோயால் உயிர் இழந்தவர்களின் அதிர்ச்சி அளிக்கும் பட்டியல்தான் இது. இவர்கள் எல்லாம் வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதி களைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் பகீர்! 
புகையிலை விளையும் பூமியான அங்கு, அதிவேக மாகப் பரவும் புற்றுநோய் குறித்தும், அதனால் ஏற்படும் துர்மரணங்கள் குறித்தும் கடந்த ஆண்டே 'தரைக்கடியில் புகையிலை... தண்ணீரில் புற்றுநோய்!’ என்ற தலைப்பில் நாம் சுட்டிக்காட்டி இருந்தோம். அப்போதைக்கு மாவட்ட நிர்வாகத்தைவிட்டு ஒரு முகாம் நடத்தியதோடு அரசாங்கம் தூங்கியதன் விளைவுதான், அதிகரித்து இருக்கும் இந்த மரணங் கள்.

குரவப்புலத்தைச் சேர்ந்த ராஜகோபால் நம்மிடம் பேசினார். ''என் மனைவி சகுந்தலாவுக்கு இரண்டு வருஷத்துக்கு முன்னால் வாய்ப் புண் ஏற்பட்டது. அது சாதாரணமா வர்றதுதானேன்னு அலட்சியமா இருந் துட்டோம். கொஞ்சநாள் கழிச்சி, ரொம்ப அதிகமா ஆயிடுச்சி. அப்புறம்தான் தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் போய்க் காண்பித்தோம். அவங்க 'சென்னை அடையாறு போங்க’ன்னாங்க. அங்க போன பிறகுதான், அது கேன்சர்னு தெரிஞ்சது. கொஞ்சம் அதிகமா பரவி இருந்தாலும், முன்கூட்டியே கண்டு புடிச்சதால, சரியான சிகிச்சை எடுத்து ஆறு மாசத்தில் அவளைக் காப்பாத்திக் கொண்டாந்துட்டேன்!'' என்றார்.


இப்படி ஒரு சிலர் புற்றுநோயின் அறிகுறிகளை உணர்ந்துகொள்ள... மற்றவர்களோ 'சாதாரணக் கட்டி, சாதாரண வலி’ என்றே இதை அலட்சியப்படுத்தி, மரணத்தை சந்திக்கிறார்கள்!


''ஏற்கெனவே ஜூ.வி-யில் செய்தி வந்ததும், பெங்களூருவில் இருக்கிற மத்திய அரசு நிறுவனமான 'ரீஜினல் ஆக்குபேஷனல் வெல்த் சென்டர்’ டாக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு இங்கு வந்து ஆராய்ச்சி செய்தது. 21 பேரிடம் இருந்து சிறுநீர், அவர்கள் பயன்படுத்தும் குடிநீர் மற்றும் மண் ஆகிய வற்றை எடுத்துச் சென்றார்கள். 20 மாதங்கள் கடந்துவிட்டன. இதுவரை அந்தக் குழு மாநில அரசுக்கோ, மக்களுக்கோ புற்றுநோய் ஏற்படுவதன் காரணத்தைக் கண்டுபிடித்துச் சொல்லவில்லை. மாவட்ட நிர்வாகமும் இதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது!'' என்றார், 'புரட்சி சிங்கங்கள்’ அமைப்பின் தலைவர் சிரஞ்சீவி.

ஏரியா மக்களுக்கு, புகையிலை விழிப்பு உணர்ச்சி ஏற்படுத்துவதோடு, நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு சேவை செய்யும் 'ஃபீஸ்ட்’ தொண்டு நிறுவன அமைப்பாளர் சுவை.சரவணனை சந்தித்தோம்.' 'சென்ற வருடத்தில் மட்டும் 700 பேர் வரை இந்தப் பகுதியில் புற்றுநோயால் இறந்துவிட்டனர். ஆனால், அத்தனையும் சாதாரண மரணங்களாகத்தான் பதியப்பட்டு வருகிறது. மக்களிடம் இன்னமும் புற்றுநோயைப்பற்றிய தெளிவு இல்லை. அதனால்தான், நாங்கள் பள்ளிகள், கிராமங்கள் ஆகியவற்றில் நேரடியாகப் போய், விழிப்பு உணர்வுப் பிரசாரங்கள் செய்கிறோம். அதோடு, கள ஆய்வும் செய்கிறோம். இது வரை 290 பேரை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உரிய ஆலோசனைகளைத் தந்து, மருத்துவ மனைகளுக்கு அனுப்பி இருக்கிறோம். ஆனால், இது தண்ணீரால் வருகிறதா, புகையிலையாலா என்பதைத்தான் கண்டறிய முடியவில்லை. அது தெரிந் தால், நிச்சயம் மக்களைக் காப்பாற்ற முடியும்...'' என்றார்.


'புகையிலைக்குத் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள்தான் புற்றுநோய்க்குக் காரணம்’ என்கிறார்கள், இயற்கை ஆர்வலர்கள். ''நான் புகையிலை போட் டதும் கிடையாது. எனக்கு புகையிலை கொல்லையும் இல்லை. வீட்டில் இருக்கிற மாட்டைக் கறந்து பால் வியா பாரம் செய்து பிழைக்கிறேன். ஆனா, எனக்கும் இந்தப் பாழாப்போன நோய் வந்திருக்கே...'' என்கிறார், சரோஜா. இவரைப்போலவே, எந்தப் பழக்கமும் இல்லாத பக்கிரி என்பவருக்கும் புற்றுநோய்!


பெங்களூரு மருத்துவர் ரவிச்சந்திரனை தொடர்புகொண்டோம். ''நாங்கள் எடுத்துவந்த மாதிரிகளில் 21 பேருக்குமே உடம்பில் நிக்கோடின் இருப்பதைக் கண்டோம். அந்த நிக்கோடின் எப்படி வந்தது என இன்னோரு ஆய்வின் மூலமாகத்தான் கண்டறிய முடியும். அதற்காக, ஐந்து மாதங்கள் அங்கே தங்கிக் கள ஆய்வு நடத்த வேண்டும். தேர்தல் வந்ததால், கொஞ்சம் காலதாமதம் ஆகிவிட்டது. அதோடு, அதற்கான நிதி கோரி எங்கள் தலைமை அலுவலகத்தில் அனுமதி கேட்டுள்ளோம். கிடைத்ததும் அங்கே சென்று ஆய்வைத் தொடர்வோம்...'' என்றார்.


நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமியின் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்றோம். ''இன்னும் ஒரு முறை மருத்துவ முகாம் நடத்தி, நோய் இருப்பவர்களைக் கண்டறியவும், அதுபற்றிய விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கிறேன்'' என்றவரிடம், பெங்களூரு மருத்துவக் குழு ஆய்வுக்குத் தயாராக இருப்பதையும், நிதி பற்றாக்குறையைப் பற்றியும் சொன்னோம். ''எங்களிடம் பொது மற்றும் சுகாதார துறைகளின் நிதி இருக்கிறது. அதன் மூலம் அவர்களின் தேவையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அவர்களிடம், இந்த விஷயத்தைக் கடிதமாக எழுதி, உடனே எங்களுக்குக் கொடுக்கச் சொல்லுங்கள்'' என்றார். அதை மருத்துவர் ரவிச்சந்திரனிடன் சொல்ல... அவரும், ''உடனே கடிதம் அனுப்பிவிடுகிறேன்'' என்றார்.


எப்படி அந்தப் பகுதிகளில் புற்றுநோய் அதிகம் பரவுகிறது என்பதைக் கண்டுபிடித்து, அந்த மக்களைக் காப்பது, அவசர அவசியம்!


B.Mohamed Jazar.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக