அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

எரிசக்தி பிரச்னைக்கு எளிய தீர்வு!



மானியம் இல்லாத ஒரு கேஸ் சிலிண்டரின் விலை 900 ரூபாய்க்கு மேல் போய் நடுத்தரக் குடும்பங்களைத் திக்குமுக்காட வைத்துக்கொண்டிருக்க, எரிசக்தி பிரச்னைக்கு எளிய தீர்வு கண்டுபிடித்துச் சொல்லி இருக்கிறது திருச்சியைச் சேர்ந்த ஜமால் முகமது கல்லூரி.
பயோ கேஸ் மூலமாக ஒரு மாதத்திற்கு 40 சிலிண்டர்களை இந்த கல்லூரி அசால்ட்டாகச் சேமித்து வருகிறது. அட என்கிற ஆச்சரியத்தோடு, அதுபற்றி விசாரிக்க கல்லூரிக்குள் நுழைந்தோம். கல்லூரி முதல்வர் காதர் மொய்தீன் விளக்கமாகவே எடுத்துச் சொன்னார். ''இந்த ஏரியாவில் பாதாளச் சாக்கடைத் திட்டம் இதுவரை அமைக்கப்படவில்லை. எங்கள் கல்லூரி விடுதியில் மொத்தம் 2,500 மாணவர்கள் தங்கியிருக்கிறார்கள். சாக்கடைக் கழிவுகள் தேங்குவதால் சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடு விளைவிப்பதாக இருந்தது. எனவே, இதற்கொரு தீர்வாக என்ன செய்யலாம் என்று நினைத்தபோதுதான், கல்லூரி முன்னாள் மாணவர்கள் மூலமாக பயோ கேஸ் முறையைப் பற்றி தெரிந்துகொண்டோம்.
கடந்த 2004-ம் ஆண்டு 25 கன மீட்டர் அளவில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட தொடங்கியது. தற்போது மொத்தமாக மூன்று யூனிட்கள் உள்ளன. இதன் மூலம் மனிதக் கழிவுகள் வெளியேற்றப்பட்டு, அவற்றிலிருந்து உருவாகும் கேஸை பயன்படுத்தி வருகிறோம். இதனால் ஆண்டுக்கு 10 லட்சம் வரை பணம் சேமிப்பதோடு, சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கவும் முடிகிறது.
இதற்குத் தேவையான 25 கன மீட்டர் அளவிலான தொட்டி ஒன்றை அமைக்க 6 லட்சம் ரூபாய் செலவாகும். அரசாங்கம் இதற்கு 1.5 லட்சம் வரை மானியம் தருகிறது. எங்களுக்கு தற்போது மொத்த கேஸ் தேவையில் மூன்றில் ஒரு பங்கு இதன் மூலம் கிடைத்துவிடுகிறது.  
நாங்கள் செய்திருக்கிற மாதிரி அனைத்துப் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், பல்கலைக் கழகங்கள், தியேட்டர்கள், ஃப்ளாட்களில்கூட இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பன்முக பலன்களைப் பெறலாம். அரசாங்கமே பாதாளச் சாக்கடை மூலம் பெறப்படும் கழிவுகளை வைத்து பயோ கேஸ் தயாரித்தால் எல்லோருக்கும் அது ஒரு மிகப் பெரிய முன்னுதாரணமாக அமையும்'' என்றார்.
அடுத்து, பயோ கேஸ் திட்ட பொறுப்பாளர் நயினார் முகமது ரிபாயுடன் பேசினோம்.
''விடுதியில் கிடைக்கும் மக்கக்கூடிய எல்லா கழிவுகளையும் ஒரு தொட்டியில் போடுகிறோம்.  இந்தப் பொருட்கள் எல்லாம் மக்கி மீத்தேன் வாயு, கார்பன்-டை-ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு ஆகிய வாயுக்கள் உருவாகும். இதில் மீத்தேன் தனியாகப் பிரிக்கப்பட்டு ஒரு குழாய் மூலமாகக் கொண்டுவந்து, சமையல் கேஸுக்குப் பதிலாகப் பயன்படுத்துகிறோம். தொட்டியில் உள்ள அழுத்தத்திற்கு ஏற்ப அடுப்பெரியும்.
எட்டு வருடங்களுக்கு முன்னதா கவே இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்துவிட்டோம். தற்போது மூன்று தொட்டிகள் வரை அமைத்திருக்கிறோம். இதனால் செப்டிக் டேங்க் அமைக்கும் செலவும் மிச்சம். கார்பன் -டை- ஆக்ஸைடு அளவும் குறைக்கப் படுகிறது. தொட்டி  அமைக்க ஆகும் செலவை இரண்டு ஆண்டுகளில் எடுத்து விடலாம். 20 லட்சம் ரூபாய் செலவாகிறது எனில், அதில் 7 லட்சம் ரூபாய்வரை ஓராண்டில் எடுக்கலாம். ஆண்டுக்கு ஒருமுறை குழாய் மூலமாகத் தொட்டியை பராமரிக்கவேண்டியது அவசியம்'' என்றார்.
சேலம் அர்ஜுன் அக்ரி டெக் நிர்வாக மேலாளர் அர்ஜுன் மோகனிடம் இதுபற்றி கேட்டோம்.
''ஒரு விவசாயி இரண்டு மாடுகளை வைத்திருந்தால்கூட அதன் கழிவுகளை வைத்து அவர் வீட்டுக்குத் தேவையான சமையல் எரிவாயுவைப் பூர்த்தி செய்துகொள்ளலாம். ஸ்கூல், காலேஜ்களில் உள்ள கேன்டீன் மூலம் ஒரு நாளில் கிடைக்கும் 30 கிலோ கொண்ட உணவுப்பொருட்களை வைத்து ஒரு மாதத்துக்கு 6 சிலிண்டர் வரை உற்பத்தி செய்யலாம். தற்போது மின்பற்றாக்குறை கடுமையாக இருப்பதால், ஆய்வகம், வகுப்பறைகளில் பயோ கேஸ் பிளான்ட் மூலம் மின்சாரத்தையும் பயன்படுத்தலாம்.
ஒருவர் பால் பண்ணை வைத்து அதில் 30 முதல் 40 மாடுகளை வளர்த்தால், அவரது மொத்த மின்சாரத் தேவையையும் பூர்த்தி செய்துகொள்ளலாம். இதற்காக நாம் அமைக்கும் தொட்டியின் கொள்ளளவுக்கு ஏற்ப, செலவு அமையும். இதற்கு குறைந்தபட்சம் 1.5 லட்சம் செலவாகும்.  ஒரு  தனி வீட்டுக்கு மட்டும் இதனை பயன்படுத்த முடியாது. வீட்டுக்குத் தேவையான கேஸ் தயாரிக்க ஒரு நாளைக்கு மூன்று கிலோ கழிவுப் பொருட்கள் தேவைப்படும்'' என்றார்.
சேலம் மாவட்டத்தில் மரவள்ளி கிழங்குகளில் இருந்து மூலப் பொருட்களை பிரித்தெடுக்கும் தொழிற்சாலையை நடத்திவரும் அருள் முருகனிடம் பேசினோம். ''நான் இந்த பிளான்ட்டை 15 லட்சம் ரூபாய் செலவில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அமைத்தேன். ஐந்து வருடத்தில் அதற்காகச் செலவிட்ட முதலீட்டைத் திருப்பி எடுத்துவிட்டேன். எங்கள் தொழிற்சாலையில் உள்ள கழிவுகளைக்கொண்டே எங்கள் தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்கள் இயங்குவதற்கு தேவையான மின்சாரத்தைப் பெற்றுவிடுகிறோம்'' என்றார்.
இத்தனை நல்ல விஷயங்களைக் கொண்டிருக்கும் பயோ கேஸ் தொழில் நுட்பத்தை மக்கள் பரவலாகப் பயன்படுத்த ஆரம்பித்தால், கேஸும் மிச்ச மாகும்; செலவும் குறையும்.
- பி.விவேக் ஆனந்த்,
படங்கள்: க.தனசேகரன், தீட்சித்.
THANKS N.VIKATAN

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக