அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

பிளஸ் டூ மாணவர்கள் உதவித் தொகையுடன் நேரடியாக எம்எஸ்சி படிக்கலாம்!

பொன். தனசேகரன்
புவனேஸ்வரத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச், மும்பையில் உள்ள சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் இன் பேசிக் சயின்சஸ் ஆகிய கல்வி நிறுவனங்களில் பிளஸ் டூ மாணவர்கள் உதவித் தொகையுடன் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்எஸ்சி படிப்பில் நேரடியாகச் சேர்ந்து படிக்கலாம்.


பிளஸ் டூ முடித்த திறமையான மாணவர்களை இளநிலைப் பட்ட நிலையிலே அறிவியல் பாடப்பிரிவுகளின் பக்கம் ஈர்க்கும் வகையில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த அறிவியல் படிப்புகளை பல முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிலையங்கள் வழங்கி வருகின்றன. அதுபோன்ற அறிவியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகின்றன. புவனேஸ்வரத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச், மும்பையில் உள்ள சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் இன் பேசிக் சயின்சஸ் ஆகிய கல்வி நிறுவனங்கள் இந்திய அணுசக்தித் துறையின் கீழ் செயல்படும் முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் ஆகும்.

இந்தக் கல்வி நிலையங்களில் உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. படிக்கலாம். அதற்கு நெஸ்ட் (National Entrance Screening Test - NEST) நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.

இந்தப் படிப்புகளில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை வழங்கும் இன்ஸ்பையர் ஃபெல்லோஷிப் கிடைக்கும். அதாவது, மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் உதவித் தொகை வழங்கப்படும். அத்துடன், கோடைகால புராஜக்ட்டுகளை மேற்கொள்வதற்காக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். இங்கு படிக்கும் திறமையான மாணவர்களுக்கு பார்க் (BARC) டிரெயினிங் பள்ளியில் சேருவதற்கு நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுவார்கள். அனைத்து மாணவர்களுக்கும் தங்கும் இட வசதி செய்து தரப்படும். அறிவியல் கல்வியைப் படிப்பதற்கும் அது தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கும் ஏற்ற வகையில் இங்குள்ள கல்விச் சூழல் இருக்கும்.

நெஸ்ட் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் விஸ்வ பாரதியில் உள்ள இன்டகிரேட்டட் சயின்ஸ் எஜுக்கேஷன் ரிசர்ச் சென்டரில் ஒருங்கிணைந்த எம்எஸ்சி படிப்புகளுக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இங்கு படிப்பதற்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கும் இன்ஸ்பயர் உதவித் தொகை கிடைக்கும். அணுசக்தித் துறையில் பணிபுரிய திறமையான அறிவியல் மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்படும் இந்தப் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கேற்ற வகையில் ஊக்கம் அளிக்கப்படும்.

இந்தத் தேர்வை எழுத என்ன தகுதி இருக்க வேண்டும்?
பிளஸ் டூ வகுப்பில் உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்து தற்போது பிளஸ் டூ தேர்வு எழுத உள்ள மாணவர்கள் இத்தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் இந்த நுழைவுத் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம்.

இந்த நுழைவுத் தேர்வு எழுத குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனினும், புவனேஸ்வரத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச், மும்பையில் உள்ள சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் இன் பேசிக் சயின்சஸ் ஆகிய கல்வி நிறுவனங்களில் சேர பிளஸ் டூ தேர்வில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 1994-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதியோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்த பொது மற்றும் ஓபிசி பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் இத்தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகை உண்டு.

நெஸ்ட் தேர்வு எப்படி இருக்கும்?
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை ஆகிய நகரங்கள் உள்பட நாட்டில் மொத்தம் 45 நகரங்களில் இந்த நுழைவுத் தேர்வு எழுதலாம். மே 31-ஆம் தேதி காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 1 மணி வரை இத்தேர்வு நடைபெறும். இந்த நுழைவுத் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்தில் அப்ஜெக்ட்டிவ் முறையில் இருக்கும். இந்த வினாத்தாளில் ஐந்து பிரிவுகள் இருக்கும். இதில் பொதுக் கேள்விகள் அனைவருக்கும் பொதுவானவை. பொது அறிவியல் குறித்து மாணவர்களின் அறிவைச் சோதனை செய்யும் வகையில் இந்தப் பகுதியில் வினாக்கள் இருக்கும்.  பொதுப் பிரிவுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது. இரண்டாவது பகுதியில் உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல் ஆகிய நான்கு பிரிவுகளில் வினாக்கள் இருக்கும். மாணவர்கள் ஏதேனும் மூன்று பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்து அந்த வினாக்களுக்குப் பதில் அளிக்கலாம். இந்தப் பகுதியில் தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் வழங்கப்படும். அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள கேள்விகளுக்கு சமமான மதிபபெண்கள் வழங்கப்படும். இந்த நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டம் பெரும்பாலும் என்.சி.இ.ஆர்.டி, சி.பி.எஸ்.இ., 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தையொட்டியதாகவே இருக்கும். பத்தாம் வகுப்பு கணிதத்தை அடிப்படையாகக் கொண்ட கேள்விகளும் இதில் கேட்கப்படலாம். இந்த நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டமும் நெஸ்ட் நுழைவுத் தேர்வின்  பழைய வினாத்தாள்களும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதன்மூலம், இத்தேர்வுப் பாடத்திட்டத்தைப் புரிந்துகொண்டு, மாணவர்கள் மாதிரித் தேர்வு எழுதிப் பார்க்கலாம்.

நெஸ்ட் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் இப்படிப்புகளில் சேர தகுதியுடைய மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, கிரீமிலேயர் அல்லாத ஓ.பி.சி. மாணவர்களுக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் அரசு விதிகளின்படி ஒதுக்கீடும் உண்டு. இந்த நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் 20-ஆம் தேதி வெளியிடப்படும்.

இந்த நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும்போது புகைப்படத்தையும் கையெழுத்தையும் முன்னதாகவே ஸ்கேன் செய்து வைத்திருக்க வேண்டியது அவசியம். தபால் மூலமும் விண்ணப்பங்களை அனுப்பலாம். தபால் மூலம் அனுப்புவதற்காக கூடுதலாக ரூ.50 செலுத்த வேண்டும்.  நுழைவுத் தேர்வு எழுத பொதுப் பிரிவு மற்றும் ஓ.பி.சி. மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.700. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் அனைத்து மாணவிகளுக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.350. விண்ணப்பக் கட்டணத்தை டிமாண்ட் டிராப்ட் மூலமோ அல்லது எலெக்ட்ரானிக் பரிமாற்ற முறையின் மூலமோ அனுப்பலாம். ‘The Chief Co-ordinator, NEST -- 2014’  என்ற பெயருக்கு புவனேஸ்வரத்தில் மாற்றத்தக்க வகையில் விண்ணப்பக் கட்டண தொகைக்கான டிமாண்ட் டிராப்ட் எடுத்து அனுப்பலாம். டிமாண்ட் டிராப்டின் பின்புறம் மாணவரின் பெயர் மற்றும் விண்ணப்ப எண்ணை எழுத வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 8. நெஸ்ட் தேர்வு தலைமை ஒருங்கிணைப்பாளருக்கு விண்ணப்பக் கட்டணத்துடன் கடிதம் எழுதியும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம். தபால் மூலம் விண்ணப்பதைப் பெறுவதற்கான கடைசி தேதி பிப்ரவரி 20-ஆம் தேதியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 8-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி வந்து சேர வேண்டும். விண்ணப்பப் படிவத்தின் நகல்களைப் பூர்த்தி செய்து அனுப்பினால் அந்த விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.

அறிவியல் துறையில் ஆர்வம் மிக்க மாணவர்களா நீங்கள்? பிளஸ் டூ படித்து முடித்ததுமே நேரடியாக எம்எஸ்சி ஒருங்கிணைந்த படிப்பில் சேருவதற்கான நல்ல வாய்ப்பு. அத்துடன் உதவித் தொகையும் உங்களுக்குக் கிடைக்கும். எனவே, பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள் இந்த வாய்ப்பை நழுவ விட வேண்டாம்!

விவரங்களுக்கு: http://www.nestexam.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக