அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

பிரிட்டனில் படிக்க ஏழை மாணவர்களுக்கு தமிழக அரசு உதவி!

மோ. கணேசன்
அரசுக் கல்லூரிகளில் முதுநிலைப் பட்டப் படிப்பில் சிறந்து விளங்கும் 11 ஏழை மாணவர்கள் பிரிட்டனுக்குச் சென்று 6 மாத காலம் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது தமிழக அரசு. இதன் மூலம், ஆட்டோ ஓட்டுநர், விவசாயி, பிளம்பர், எலெக்ட்ரீஷியன், கோவில் பூசாரி, டெய்லர் போன்ற சமூகத்தின் விளிம்பு நிலை குடும்பங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் பிரிட்டனில் படிக்கச் செல்கிறார்கள்.


முதுநிலை பட்டப் படிப்பில் சிறந்து விளங்கும் ஏழை மாணவர்களுக்கு பிரிட்டனில் படிக்கும் வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்தித் தந்துள்ளது. லைஃப் சயின்சஸ், பிஸிக்கல் சயின்சஸ், கணிதம், வரலாறு, பொருளாதாரம், புவியியல், உளவியல், வணிகவியல்  ஆகிய பாடப் பிரிவுகளில் முதுநிலைப் பட்டப் படிப்பில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள், பிரிட்டனில் உள்ள கிங்ஸ் காலேஜ், பிர்மிங்ஹாம் யுனிவர்சிட்டி, ஷெபீல்ட் ஹால்லம் யுனிவர்சிட்டி, எட்ஜ் ஹில் யுனிவர்சிட்டி, ராயல் ஹாலவே யுனிவர்சிட்டி ஆகிய கல்வி நிறுவனங்களில் 6 மாத காலம் (ஒரு செமஸ்டர்) படிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த மாணவர்களுக்கான அட்மிஷன் முதல் அனைத்து செலவுகளையும் தமிழக அரசே வழங்குகிறது. பிரிட்டனில் படிக்கத் தகுதியுடைய மாணவர்களை தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் தேர்வு செய்கிறது. பிரிட்டிஷ் கவுன்சிலுடன் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இளநிலைப்படிப்பில் குறைந்தபட்சம் 65 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். ஆங்கில மொழிப்பாடத்தில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும். கல்லூரி நிலையில் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு முதலில் பயிற்சி அளிக்கப்பட்டு, ஆங்கில மொழித் திறன் தேர்வான ஐ.இ.எல்.டி.எஸ். எழுத வைக்கப்படுவர். பல்வேறு கட்டத் தேர்வுகளுக்குப் பிறகு பிரிட்டனில் படிக்கத் தகுதியுடைய மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.  தேர்வு செய்யப்படும் மாணவர்களது விமான பயணச்செலவு,  தங்குவதற்கு, உணவு, படிப்புக்கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தமிழக அரசே பார்த்துக் கொள்கிறது. இத்திட்டத்தின்கீழ் வெளிநாடு செல்லும் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 15 லட்சத்தை தமிழக அரசு செலவு செய்கிறது. ஏற்கெனவே 14 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் பிரிட்டன் சென்றுள்ளனர். தற்போது  11 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் பிரிட்டன் செல்கிறார்கள்" என்கிறார் தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் உறுப்பினர் செயலரான கரு. நாகராஜன்.

தற்போது, இந்த திட்டத்தின்கீழ் பிரிட்டனில் படிக்கச் சென்றுள்ள  சாமானியக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் விவரம் இதோ...

சென்னை பிராட்வேயில் உள்ள பாரதி பெண்கள் அரசு கல்லூரியில் எம்.எஸ்சி. கணிதம் படிக்கும் எம்மிமால் ராஜாத்தி, லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் சேர்ந்துள்ளார். இவரது அப்பா ராஜேந்திரன், இவரது அம்மா மேரி ஆகியோர் 2-ஆம் வகுப்பு மட்டுமே படித்தவர்கள். ராஜேந்திரன் பிளம்பராக வேலை செய்து கொண்டிருக்கிறார். இளநிலைப் பட்டப் படிப்பில் பல்கலைக்கழக அளவில் இரண்டாமிடம் பிடித்தவர். படித்து முடித்ததும் விரிவுரையாளர் அல்லது ஐ.ஏ.ஸ். தேர்வு எழுதி அதிகாரியாகும் ஆர்வத்துடன் இருக்கிறார் ராஜாத்தி.

கோவை அரசு கலைக்கல்லூரியில் எம்.எஸ்சி.கணிதம் படித்துக் கொண்டிருக்கும் காருண்யா, எம்.எஸ்சி. புவியியல் படித்துக் கொண்டிருக்கும் லிபீஷ் ஆகிய இருவரும் பிரிட்டனிலுள்ள பிர்மிங்ஹாம் யுனிவர்சிட்டியில் படிக்க இருக்கிறார்கள்.

மேட்டுப்பாளையம்தான் எனது சொந்த ஊர். கோவை அரசு கலைக்கல்லூரியில் எம்.எஸ்சி. கணிதம் படித்து வருகிறேன். எனது அப்பா மணி, லேத் பட்டறை வைத்திருக்கிறார். அம்மா விஜயகுமாரி. அப்பா பத்தாம் வகுப்பும், அம்மா 9-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்கள். எனது அண்ணன் டிப்ளமோ படித்திருக்கிறார். நான்தான் எனது குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி. எதிர்காலத்தில் சிறந்த ஆசிரியராக வரவேண்டும் என்பதே எனது கனவு" என்கிறார் காருண்யா.

கேரளாவில் உள்ள கோழிக்கோடுதான் எனது சொந்த ஊர். நான் தற்போது கோயம்புத்தூரில் உள்ள அரசுக் கலைக்கல்லூரியில் எம்.எஸ்சி. புவியியல் படித்து வருகிறேன். எனது அப்பா பாலன், அம்மா லீலா ஆகிய இருவரும் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்தவர்கள். என் அப்பா டெய்லர். புவியியலில் பிஎச்.டி. பட்டம் பெற்று விரிவுரையாளராக வேண்டும்" என்கிறார் முதல் தலைமுறை பட்டதாரி லிபீஷ்.

வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் எம்.எஸ்சி. வேதியியல் படித்துவரும் விமலா, உடுமலைப்பேட்டை அரசு கலைக்கல்லூரியில் எம்.எஸ்சி. வேதியியல் படித்து வரும் விபின் ஆகியோர் ஷெபீல்ட் ஹால்லம் யுனிவர்சிட்டியில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

வேலூர்தான் எனது சொந்த ஊர். என் அப்பா மூர்த்தி. அம்மா சரஸ்வதி. அப்பாவும் அம்மாவும் 10-ஆவது வரைக்கும்தான் படிச்சிருக்காங்க. விவசாயக் குடும்பம் எங்களுடையது. எனக்கு ஒரு அண்ணன், ஒரு தங்கை. வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் எம்.எஸ்சி. வேதியியல் படிச்சிக்கிட்டிருக்கேன். எதிர்காலத்தில் கிரீன் கெமிஸ்ட்ரியில் பிஎச்.டி. படிக்க வேண்டும்" என்கிறார் விமலா.

எனக்கு சொந்த ஊர் உடுமலைப்பேட்டை. உடுமலைப்பேட்டை அரசு கலைக்கல்லூரியில் எம்.எஸ்சி. வேதியியல் படித்து வருகிறேன். அப்பா சபரிதாஸ் பி.யூ.சி. படித்தவர். அம்மா புஷ்பலதா பத்தாவது வரை படித்தவர். என் அப்பா பர்னீச்சர் கடையில் வேலை செய்கிறார். எதிர்காலத்தில் நல்ல வேதியியல் வல்லுனராக வரவேண்டும் என்பது எனது லட்சியம்" என்கிறார் முதல் தலைமுறை பட்டதாரி விபின்.

திருநெல்வேலி ராணி அண்ணா அரசு கலைக்கல்லூரியில் எம்.காம். படித்துவரும் சுப்புலட்சுமி, கோவை அரசு கலைக் கல்லூரியில் எம்.ஏ. வரலாறு படித்துவரும் சுகன்யா, சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.எஸ்சி. உளவியல் படித்துவரும் ஐஸ்வர்யா ஆகியோர் எட்ஜ் ஹில் யுனிவர்சிட்டியில் படிக்க இருக்கிறார்கள்.

சேரன்மகாதேவி அருகிலுள்ள காருகுறிச்சி எனது சொந்த ஊர். திருநெல்வேலி ராணி அண்ணா அரசு கலைக்கல்லூரியில் எம்.காம். படிச்சிகிட்டிருக்கேன். என் அப்பா முப்பிடாதி, 10-ஆவது வரை படித்தவர். சைக்கிள் கடை வைத்திருக்கிறார். அம்மா கோமதி. 3-ஆவது வரை மட்டுமே படித்தவர். என் குடும்பத்திலேயே நான்தான் முதல் தலைமுறைப் பட்டதாரி. லண்டனில் படிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது எனக்கு மிகவும் சந்தோஷத்தைத் தருது. தென் மாவட்டங்களிலிருந்து லண்டனிற்குச் செல்லும் ஒரே மாணவி நான்தான்" என்று சொல்லும் சுப்புலட்சுமிக்கு எதிர்காலத்தில் ஆசிரியராக வரவேண்டும்  என்பதே லட்சியம்.

கோயம்புத்தூர்தான் எனது  சொந்த ஊர். கோவை அரசு கலைக் கல்லூரியில் எம்.ஏ., வரலாறு  படிச்சிக்கிட்டிருக்கேன். என் அப்பா நாகராஜ் 4-ஆவது மட்டுமே படித்தவர். அம்மா பாக்யலட்சுமி. இவர் 8-ஆவது மட்டுமே படித்தவர். எங்க அப்பா மட்டுமல்ல அம்மாவும் ஆட்டோ ஓட்டித்தான் என்னையும் எனது சகோதரியையும் படிக்க வைத்து வருகிறார்கள்.  நான் எங்கள் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி. எதிர்காலத்தில் ஆசிரியராக வேண்டும் என்பதே எனது குறிக்கோள்" என்கிறார்  சுகன்யா.

ஆந்திராதான் எங்களது பூர்வீகம். நான் சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.எஸ்சி., உளவியல் படித்து வருகிறேன். அப்பா ரத்தினம். 12-ஆவது வரை படித்தவர்,  விவசாயி. அம்மா அருணோதயம். 10-ஆவது வரை படித்தவர். எனக்கு ஒரு அக்கா. அவர்தான் என்னை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். எதிர்காலத்துல ‘பிஹேவியரல் தெரபிஸ்ட்’ ஆகணும்ங்கறது என்னோட ஆசை. அத்துடன் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக சேவை செய்ய வேண்டும் என்பதிலும் ஆர்வம் உள்ளது" என்கிறார் ஐஸ்வர்யா.

சென்னை, வியாசர்பாடியிலுள்ள டாக்டர். அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரியில் எம்.எஸ்சி. கணிதம் படித்துவரும் மொஹம்மது ஹஸன் யாசீன், சென்னை, ராணி மேரி கல்லூரியில் எம்.எஸ்சி. கணிதம் படித்துவரும் ஜீவிதா, உடுமலைப்பேட்டை அரசு கலைக்கல்லூரியில் எம்.எஸ்சி. இயற்பியல் படித்துவரும் சாயாதேவி ஆகிய மூவரும் ராயல் ஹாலவே யுனிவர்சிட்டியில் படிக்க உள்ளனர்.

எங்களுக்கு சொந்த ஊர் சென்னைதான். வியாசர்பாடி டாக்டர். அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் எம்.எஸ்சி. கணிதம் படிச்சிக்கிட்டிருக்கேன். என் அப்பா முகமது ஷரீப். பி.காம். படித்துவிட்டு செக்யூரிட்டியா வேலை பாத்துக்கிட்டிருக்கார். அம்மா ஜீனத் பேகம். 8-ஆவது வரை படித்திருக்கிறார். எதிர்காலத்தில் சிறத்த கணித ஆசிரியராக வரவேண்டும்" என்கிறார் மொஹம்மது ஹஸன் யாசீன்.

எனக்கு சென்னைதான் பூர்வீகம். அப்பா மணிமாறன். எலெக்ட்ரீஷியன். அம்மா சாந்தி 8-ஆவது வரை படித்தவர். எனக்கு இரண்டு அக்கா. ரெண்டு பேருமே ஆசிரியப் பணியில் இருக்கிறார்கள். என்னோட அக்காங்களைப் போல நானும் ஆசிரியராக வரணும். அதான் எனது லட்சியம்" என்று குதூகலத்துடன் சொன்னார் ஜீவிதா.

உடுமலைப் பேட்டை தான் எனது சொந்த ஊர். இங்குள்ள அரசு கலைக் கல்லூரியில் எம்.எஸ்சி இயற்பியல் படிச்சிக்கிட்டிருக்கேன். அப்பா கிருபாகரன் 10-ஆவது வரை படித்தவர். கோயில் பூசாரியாக இருக்கிறார். அம்மா பத்மாவதி பிளஸ் டூ வரை படித்தவர். ‘குவான்டம் மெக்கானிக்ஸ்’ துறையில்  பிரகாசிக்க வேண்டும் என்பது எனது கனவு" என்கிறார் சாயாதேவி.

பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் படிக்க இடம் கிடைத்ததால், இந்த மாணவ, மாணவிகள் மட்டுமல்ல, அந்த விளிம்பு நிலை குடும்பங்களே மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது.

மூன்று ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் இத்திட்டத்தின்கீழ் பிரிட்டனில் படிக்க  விரும்பும் மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு ஒவ்வொரு கல்வி ஆண்டின் இரண்டாவது செமஸ்டரின்போது வெளியிடப்படும். அந்தந்தக் கல்லூரி மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்" என்கிறார் கரு. நாகராஜன். பிரிட்டனில் படிக்க விரும்பும் அரசுக் கல்லூரி மாணவர்களா நீங்கள்? அதற்கான தகுதிகளை -வளர்த்துக் கொள்ள  இப்போதே தயாராகுங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக