அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

+2 மாணவர்களின் வெற்றிக்கு வழிகாட்டும் வெற்றி ப்படிகள்

மோகனன்
"ஜென் துறவியிடம் சென்று தனது எதிர்காலம் நன்றாக இருக்குமா, மோசமானதாக இருக்குமா என்று மிரட்டும் தொனியில் கேட்டான் முரடன் ஒருவன். சற்றுநேரம் அமைதியாக இருந்த அந்தத் துறவி தன் முன்னே பறந்து சென்ற பட்டாம்பூச்சியைப் பிடித்து ஒரு கைக்குள் வைத்து மூடிக் கொண்டு, ‘என் கையில் உள்ள பட்டாம்பூச்சி உயிரோடு இருக்கிறதா? இல்லையா என்பதை உன்னால் சொல்ல முடியுமா?’ என்று கேட்டார். முரடன் சற்று யோசித்தான். உயிரோடு இருக்கிறது என்றால் இந்தத் துறவி, கையாலேயே நசுக்கிக் கொன்று விடுவார். உயிரோடு இல்லை என்று சொன்னால், அப்படியே பறக்க விட்டு விடுவார் என யோசித்தவன்,


‘அது உயிரோடு இருப்பதும், இல்லாததும் உங்கள் கையில்தான் இருக்கிறது’ என்றான். ‘இதேதான் நீ கேட்ட கேள்விக்கும் பதில்’ என்றார் அந்தத் துறவி.இப்படி திருச்சியில் நடைபெற்ற வெற்றிப்படிகள் நிகழ்ச்சியில் கதை சொன்னார் கவிஞர் நந்தலாலா, மாணவர்களாகிய நீங்கள். முல்லைப் பூக்கள். இந்தத் தேர்வில் வெற்றி பெறுவதும் பெறாததும் உங்கள் கையில்தான் இருக்கிறது. தேர்வுக்கு இன்னும் இரண்டு மாத காலம்தான் இருக்கிறது. பாடங்களை நன்கு புரிந்து படியுங்கள். படித்ததை மனதில் இருத்துங்கள். தேர்வில் தேவையான பதிலாக அதை நிறுத்துங்கள், பின்னர் அதுவே உங்களை தானாக வெற்றிப்படிகளில் நிறுத்தி விடும். ‘புதியதலைமுறை கல்வி’ இதழின் வெற்றிப்படியைப் போல" என்று அவர் மேலும் மாணவர்களுக்கு உற்சாகமூட்டினார்.

திருச்சி அருகே பூலாங்குளத்துப்பட்டியில் அமைந்துள்ள சிவானி என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்ற ‘வெற்றிப்படிகள்’ நிகழ்ச்சியில் பிளஸ் டூ மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்கிய ஆலோசனைகள் இதோ...

பி. பிலவேந்திரன் (கணித ஆசிரியர், செயிண்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி, விராகலூர்):

முதல் மூன்று பாடங்களை முழுமையாகப் படித்தாலே 90 மதிப்பெண்களை எளிதாகப் பெறலாம். 5 மற்றும் 9-வது பாடங்கள் மிகவும் எளிதானவை. இந்த இரண்டு பாடங்களையும் படித்தால் 62 மதிப்பெண்களைப் பெற்று விடலாம். கணிதப்பாடத்தைப் பொருத்தவரை முதலில் 10 மதிப்பெண் கேள்விகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பதில் எழுதுங்கள். படம் வரையவேண்டி இருந்தால் படத்தை பேப்பரின் மையப்பகுதியில் வரைந்துவிடுங்கள். மறக்காமல் பார்முலாக்களையும் எழுதிவிடுங்கள். 5-ஆம் பாடத்தில் உள்ள கணக்குகளை மாதிரியாக வைத்து, புத்தகத்தில் இல்லாத கணக்குகள் வினாத்தாளில் இடம்பெறும். ஆதலால் இந்தப் பாடத்தில் உள்ள கணக்குகளையும், அதன் பார்முலாக்களையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்பாடத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பார்முலா மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றினால் இதற்கு எளிதாக விடையளித்துவிடலாம். புத்தகத்தின் பின்புறம் கொடுக்கப்பட்டிருக்கும் ஒருமதிப்பெண் வினாக்களில் இருந்து 30 வினாக்களும், பாடங்களுக்கு உள்ளே இருந்து 10 ஒரு மதிப்பெண் வினாக்களும் கேட்கப்படும். கணக்குகளை அடிக்கடி போட்டுப் பழகுங்கள்.

‘சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பது போல, கணக்குகளை அடிக்கடி போட்டுப் பார்த்தால் எளிதாக மதிப்பெண்கள் பெறலாம்.

ஆர். ஜெரால்டு ஆரோக்கியராஜ் (இயற்பியல் ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, வடசேரி):

1,2,4,6,7,8 பாடங்களை மட்டும் நன்கு படித்தாலே 150-க்கு 135 மதிப்பெண்களைப் பெற்றுவிடலாம். 9-ஆம் பாடத்தில் 3 மதிப்பெண் கேள்விகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படியுங்கள். அதிலிருந்து 3 மதிப்பெண்கள் கேள்விகள் மட்டுமே கேட்பார்கள். புத்தக்கத்தின் பின்புறம் உள்ள ஒரு மதிப்பெண் கேள்விகளை நன்கு படித்து, விடையளிக்க பழகிக் கொள்ளுங்கள். படித்தபின், வீட்டில் உள்ளோர் அல்லது நண்பர்களிடம் ஒரு மதிப்பெண் வினாக்களை கேட்கச் சொல்லி விடை சொல்லிப்பாருங்கள். படங்களை வரைந்து பழக வேண்டுமெனில் சிலேட்டில் வரைந்து பழகுங்கள். விரைவில் தப்பில்லாமல் வரைவதற்கு உங்களால் கற்றுக் கொள்ள முடியும். 3 மதிப்பெண் கேள்விகளில் வரையறு என்று கேட்டிருந்தால், அதற்கான விளக்கம் மற்றும் பார்முலா போன்றவற்றை முழுமையாக எழுதுங்கள். எடுத்துக்காட்டு கணக்குகளை விட மாதிரிக் கணக்குகள் எளிதாக இருக்கும். ஆதலால் அந்தக் கணக்குகளை அடிக்கடி போட்டு பார்த்து பழகிக் கொள்ளுங்கள். ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு பதில் அளிக்க 20 நிமிடங்களும், 3 மதிப்பெண்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க 45 நிமிடங்களும், 5 மதிப்பெண்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க 50 நிமிடங்களும், பத்து மதிப்பெண் கேள்விகளுக்கு பதில் அளிக்க 55 நிமிடங்களும் எடுத்துக் கொள்ளுங்கள். மீதமுள்ள 10 நிமிடங்களில் எழுதிய விடைகளை சரிபார்க்க பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தவே (வேதியியல் ஆசிரியர், ஒமேகா பயிற்சி மையம்):

வேதியியலில் 1, 2, 3, 5, 6, 7, 8, 9, 10, 12, 17, 22 பாடங்களை நன்கு படித்தாலே 120 மதிப்பெண்களை எளிதாகப் பெற்று விடலாம். 14, 15, 22 ஆகிய பாடங்களில் உள்ள ஒரு மதிப்பெண்கள் கேள்விகளைப் படிக்க வேண்டாம். மற்ற பாடங்களில் உள்ள ஒரு மதிப்பெண் கேள்விகளை படித்துக் கொள்ளுங்கள்.

3 மதிப்பெண்கள் கேள்விகளைப் பொருத்தவரை, 2006 மார்ச் முதல் செப்டம்பர் 2013 வரை நடைபெற்ற பொதுத்தேர்வு வினாத்தாள்களில் உள்ள 3 மதிப்பெண்கள் கேள்விகளை படியுங்கள். இவற்றில் இருந்துதான் கேள்விகள் அமையும். 5, 6, 14, 17, 21 ஆகிய பாடங்களில் இருந்து 3 மதிப்பெண்கள் கேள்விகள் வராது. ஆதலால் அப்பாடத்தில் உள்ள மூன்று மதிப்பெண்கள் கேள்விகளை படித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

1, 5, 6, 9, 10, 11, 17, 22 ஆகிய பாடங்களில் உள்ள 10 மதிப்பெண்கள் கேள்விகளைப் படித்துக் கொள்ளுங்கள். படங்களை தெளிவாக வரைந்து அமிலம், சேர்மம் போன்றவற்றை மறவாமல் குறிப்பிடுங்கள். ஒற்றுமை, வேற்றுமை குறித்த கேள்விகளுக்கு டேபிள் வரைந்து காட்டுங்கள். தனிமங்கள் அவற்றின் குறியீடுகள் போன்றவற்றைப் படித்து வைத்துக் கொள்ளுங்கள்.

என். சத்யமூர்த்தி (உயிரியல் ஆசிரியர், இ.ஆர். மேல்நிலைப்பள்ளி, திருச்சி):

தாவரவியலைப் பொருத்ததவரை 1, 2, 5 ஆகிய பாடங்களை முழுமையாகப் படித்தாலே உயிரியலில் தாவரவியலுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 75 மதிப்பெண்களில் 69 மதிப்பெண்களை எளிதாகப் பெற்றுவிடலாம். மீதமுள்ள பாடங்களில் உள்ள ஒரு மதிப்பெண் கேள்விகளைப் படித்தால் போதும் 75 மதிப்பெண்கள் எடுத்து விடலாம்.

விலங்கியலைப் பொருத்தவரை 1,2,3,4 ஆகிய பாடங்களை முழுமையாகப் படித்தாலே உயிரியலில் விலங்கியலுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 75 மதிப்பெண்களில் 68 மதிப்பெண்களை எளிதாகப் பெற்றுவிடலாம். மீதமுள்ள பாடங்களில் உள்ள ஒரு மதிப்பெண் கேள்விகளைப் படித்தால் போதும், இதிலும் 75 மதிப்பெண்கள் எடுத்து விடலாம்.

ஹெர்பேரியம், தாவரங்களின் பொருளாதார முக்கியத்துவம், கிரெப் சுழற்சி, இருள்வினை, ஒளிச்சேர்க்கையின் முக்கியத்துவம், சி3-சி4 தாவரங்களுக்கு இடையேயுள்ள வேறுபாடுகள், குரோமோசோமின் வகைகள், ஜீன் புள்ளி மாற்றம், திடீர் ஜீன் மாற்றத்தின் முக்கியத்துவம், நோதடைக் காப்பியல் போன்றவற்றை படித்துக் கொள்ளுங்கள்.

தாவரவியலாக இருந்தாலும் சரி, விலங்கியலாக இருந்தாலும் சரி, படங்களை வரைந்து மறக்காமல் பாகங்களை குறித்துக் காட்டுங்கள். பாகங்களை குறித்துக் காட்டுவதற்கும் மதிப்பெண்கள் உண்டு.

எஸ். வின்சென்ட் ராஜ் (கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர், எஸ்.பி.ஐ.ஒ.ஏ. பள்ளி, திருச்சி): 1, 2, 3, 4, 5, 6, 7 பாடங்களையும் முழுமையாகப் படிக்க வேண்டும். ஒரு மதிப்பெண் கேள்விகள் 75 கேட்கப்படும். இதற்காக உங்களுக்கு விடையளிக்க ஓ.எம்.ஆர். ஷீட் கொடுக்கப்படும். இவற்றில் கட்டங்களாக உள்ள (தகவல்) பகுதிகளை பேனாவாலும், வட்டமாக உள்ள (விடைகள்) பகுதிகளை பென்சிலாலும் நிரப்ப வேண்டும்.

இரண்டாவது பகுதிப் புத்தகத்தில் உள்ள 6-ஆவது பாடத்தில் 5 மதிப்பெண்கள் கேள்விகள் கேட்பார்கள். ஆதலால் அதை படித்துக் கொள்ளுங்கள். உரையாடல் பெட்டி என்று கேள்வியில் குறிப்பிட்டிருந்தால் கண்டிப்பாக வரைய வேண்டும். சி++ல் புரோகிராம் கேட்டிருந்தால் மட்டும் எழுதவும். கேள்வியில் என்ன கேட்டிருக்கிறார்களோ அதற்குத் தகுந்தாற்போல் பதில் எழுதுங்கள். திட்டமிட்டுப் படியுங்கள். தெளிவாக விடையளியுங்கள். வெற்றி உங்களுக்கே.

நிகழ்ச்சியில் சிவானி என்ஜினீயரிங் கல்லூரியின் தலைவர் பி.செல்வராஜ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இக்கல்லூரியின் செயலாளர் எஸ்.விக்னேஷ்வரன் உயர்கல்வி குறித்தும், மாணவர்களுக்கு உள்ள உதவித்தொகைகள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்தும் விளக்கினார். தேர்வு குறித்து பயம் வேண்டாம். திட்டமிட்டுப் படித்தால் வெற்றி நிச்சயம்" என்றார் திருச்சி மாவட்ட மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் பி. வசந்தா. இக்கல்லூரியின் முதல்வர் கணேஷ் சாந்தி, ‘புதிய தலைமுறை’ இதழின் தெற்கு மண்டல மேலாளர் டி.எம்.எஸ். சரவணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக