அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழகத்தின் இருவருக்கு இந்திய அளவில் 6, 7-வது இடம்!

புதுடெல்லி, மே 4: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்டப் பணிகளுக்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த இருவர், இந்திய அளவில் 6-வது மற்றும் 7-வது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இந்தத் தேர்வில் நாடு முழுவதும் 998 பேர் வெற்றி பெற்றனர்.




தமிழகம் சாதனை...

இந்தத் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 97 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, வெற்றி பெற்றவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதில், தமிழ் வழியில் எழுதிய 2 பேர் வெற்றி பெற்றுள்ளதும் கவனத்துக்கு உரியது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 29 பேர் கூடுதலாக சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

தமிழகத்தின் இருவர்...

தமிழகத்தைச் சேர்ந்த ஏ.அருண் தம்புராஜ் இந்திய அளவில் 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். 2011-ல் நடந்த தேர்வில் 396வது இடத்தைப் பிடித்த இவர், தற்போது ஐ.பி.எஸ். அதிகாரியாக கர்நாடகத்தில் பணியாற்றி வருகிறார்.

"என்னால் நல்ல போலீஸ் அதிகாரியாக செயல்பட முடியும். ஆனால், என்னுடைய திறன்களுக்கு ஐ.ஏ.எஸ். ஆவதே பொருத்தமாக இருக்கும் என நம்பினேன. அதற்கான முயற்சியில் வெற்றி பெற்றேன்" என்கிறார் அருண் தம்புராஜ்.

சென்னையில் உள்ள செட்டிநாடு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவன மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் டாக்டர் டி.பிரபு ஷங்கர், இந்திய அளவில் 7-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

"ஒரு மருத்துவராக மக்களின் நோய்களை குணப்படுத்த முடியும். ஆனால், அந்தப் பாதிப்புகளுக்குக் காரணமான வறுமை, ஊட்டக்குறைவு முதலியவற்றை அகற்றுவதற்கு விரும்பியே இந்தத் தேர்வை எழுதினேன்" என்கிறார் பிரபு ஷங்கர்.

தமிழக அரசு மையத்தில் படித்தவர்கள் 49 பேர்...

அகில இந்திய அளவில் வெற்றி பெற்றுள்ள 998 பேர்களில் 49 பேர் தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணிகள் பயிற்சி மையத்தில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தமிழக அரசு நடத்தி வரும் அகில இந்திய குடிமைப்பணிகள் பயிற்சி மையத்தில் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்முக தேர்வுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

மெயின் தேர்வுக்கு பயிற்சி பெறும் அனைவருக்கும் பயிற்சி மற்றும் தங்கு வசதியுடன் எவ்வித வருமான உச்சவரம்பு பாராமல் மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மெயின் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு பணியில் உள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளையும், நிபுணர்களையும் வரவழைத்து மாதிரி நேர்முகத்தேர்வு (மாக் இண்டர்வியூ) பயிற்சி அளிக்கிறார்கள்.

மனிதநேய மையத்தில் இருந்து 45 பேர்...

இந்தத் தேர்வில் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மனித நேயம் மையத்தில் படித்த 45 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கேரள மாணவி முதலிடம்...

கேரளத்தைச் சேர்ந்த ஹரிதா வி.குமார் அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். தற்போது, ஃபாரிதாபாத்தில் ஐ.ஆர்.எஸ் அதிகாரியாக பணியாற்றி வரும் இவர், தனது நான்காவது முயற்சியில் இந்தச் சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக