அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

ப்ளஸ் 1ல் எந்த க்ரூப் எடுக்கலாம்? - Group I: பல துறைகளில் சாதிக்கலாம்!

)
பத்தாம் வகுப்புக்குப் பிறகு, மேல்நிலைப் பள்ளிக்கு அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு எழும் முதல் கேள்வி... ப்ளஸ் 1-ல் என்ன க்ரூப் எடுக்கலாம்?

'அப்பா அந்த க்ரூப் எடுக்கச் சொன்னார்’, 'அம்மாதான் இந்த க்ரூப் எடுத்தா நல்லதுன்னு சொன்னாங்க’, 'என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் எடுக்கிறதாலே இதே க்ரூப்பை நான் எடுக்கிறேன்’, 'என் மார்க்குக்கு இந்த க்ரூப்தான் கிடைச்சுது’, 'என்னோட டீச்சர் சொன்னதால் இந்த க்ரூப்பை எடுக்கிறேன்’.


ப்ளஸ் 1 சேரும் மாணவர்கள் பலரும் தங்களது க்ரூப்பைத் தேர்ந்தெடுத்ததற்கு இது போன்ற காரணங்களையே சொல்கின்றனர். அவர்களில் பலரும் சில மாதங்கள் கழித்து, 'அய்யய்யோ, அந்த க்ரூப்பை எடுத்து இருக்கலாமே!’, 'இந்த க்ரூப் எடுத்திருந்தால் நல்லா இருந்திருக்குமே' என்று புலம்புவதும் உண்டு. இத்தகைய நிலைக்கு ஆளாகாமல், உங்களுக்கும் உங்கள் இலக்குகளுக்கும் பொருத்தமான க்ரூப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு வழிகாட்டவே இந்தச் சிறப்புப் பக்கங்கள்...

*

பல துறைகளில் சாதிக்கலாம்!

கணிதத்திலும் அறிவியலிலும் அதிகமான ஆர்வம் இருக்கிறதா? நீங்கள் 'டிக்' செய்ய வேண்டியது ஃபர்ஸ்ட் க்ரூப் (Group- I).

கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களைக்கொண்டது ஃபர்ஸ்ட் க்ரூப். இந்தப் பிரிவில் உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல், பயோ-கெமிஸ்ட்ரி, இங்கிலீஷ் ஃபார் கம்யூனிகேஷன், ஹோம் சயின்ஸ் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றை விருப்பப் பாடமாகத் தேர்வுசெய்யலாம். இந்த விருப்பப் பாடங்கள், பள்ளிகளுக்குப் பள்ளி மாறுபட்டு இருக்கலாம்.

ஃபர்ஸ்ட் க்ரூப்பைத் தேர்ந்தெடுக்கும் முன் கவனத்தில்கொள்ள வேண்டியவைபற்றி, நெல்லை மாவட்டம் - இலத்தூரில் உள்ள லெட்சுமி ஹரிஹர பள்ளியின் ஆசிரியர், எஸ்.சரவணபெருமாள் கூறும்போது, ''ஃபர்ஸ்ட் க்ரூப் எடுத்தால்தான் நமக்கு நல்ல மதிப்பு கிடைக்கும் என்ற எண்ணம் மாணவர்கள் மத்தியில் உள்ளது. அது தவறு. எந்த க்ரூப்பைத் தேர்ந்தெடுப்பதாக இருந்தாலும், அதில் உள்ள பாடங்களையும், அதைப் படிப்பதால் என்ன பயன் என்பதையும்தான் கருத்தில்கொள்ள வேண்டும்.

பொதுவாக, பத்தாம் வகுப்பின் ஒட்டுமொத்தமாக அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கே இந்த க்ரூப்பை பள்ளி ஒதுக்கும். பள்ளியில் தருகிறார்களே என்பதற்காக அல்லாமல், கணக்கு மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களில் மிகுதியான ஆர்வமும், அதிக ஈடுபாடும் இருந்தால் மட்டுமே இதைத் தேர்வுசெய்ய வேண்டும். இந்த இரு பாடங்களின் அடிப்படையான விஷயங்களை முழுமையாகத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். அப்போதுதான், இந்தப் பிரிவில் சிறந்து விளங்க முடியும்.

நீங்கள் இதுவரை உங்கள் ஆசிரியரையே சார்ந்து படித்து வந்திருப்பீர்கள். மேல்நிலைப் பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரையில், ஆசிரியர் என்பவர் வழிகாட்டுதலை வழங்குபவர் மட்டுமே. உங்களின் பங்குதான் அதிகமாக இருக்கும். எனவே, உங்களது க்ரூப்பைத் தேர்ந்தெடுக்கும் முன், அதில் உள்ள பாடங்களைப் பற்றிய அடிப்படையைத் தெரிந்துகொள்ளுங்கள்.

உயிரியலை விருப்பப் பாடமாகக் கொண்டு, ஃபர்ஸ்ட் க்ரூப்பை எடுத்து, ப்ளஸ்-2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால், மருத்துவ மற்றும் பொறியியல் இரண்டிலும் சாதிக்கலாம். இதைத் தவிர மற்ற விருப்பப் பாடங்களுடன் இந்த க்ரூப்பைத் தேர்ந்தெடுத்தால், பொறியியல் மட்டுமின்றி, கெமிக்கல், அணுசக்தி, விண்வெளி, மென்பொருள், கட்டடக் கலை, கடல்சார் படிப்பு, கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த இளங்கலைப் படிப்புகள் என எந்தத் துறையிலும் நீங்கள் வெற்றியாளராக வலம்வர முடியும்.

தமிழ்வழி படிக்கும் மாணவர்களிடம் இருக்கும் ஒரே பின்னடைவு... ஆங்கிலத்தில் சரளமாகப் பேச இயலாததுதான். தாய்மொழியில் பாடங்களைப் படிப்பதால், உங்களுக்குத் துறை சார்ந்த சிந்தனையும் படைப்பாற்றலும் மிகுதியாக இருக்கும். ஆனால், உங்களில் பலருக்கும் மனதில் உள்ளதை ஆங்கிலத்தில் சொல்வதில் தயக்கம் இருக்கலாம். ஆரம்பத்தில் இருந்தே முறையான பயிற்சிகள் இருந்தால், ப்ளஸ் -2 முடிக்கும்போது கம்யூனிகேஷனிலும் அசத்தத் தொடங்குவீர்கள். இது, ஃபர்ஸ்ட் க்ரூப் தேர்ந்தெடுப்பவர்களுக்கு மட்டுமல்ல; அனைவருக்குமே மிகவும் முக்கியமானது'' என்கிறார் சரவண பெருமாள்.
அலசுவோம்...
-சுட்டி விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக