அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

பி.இ... எந்த கோர்ஸ் படிக்கலாம்? பொறியியல் படிப்பு 1 - சிவில் இன்ஜினீயரிங்

சிறப்புத் தொடர்
ரு நாட்டை கட்டமைப்பதில் அரசுக்கு எந்த அளவுக்குப் பங்கு இருக்கிறதோ, அதற்கு இணையான பங்களிப்பு பொறியியல் வல்லுனர்களுக்கும் உள்ளது என்று சொன்னால் அது மிகையில்லை. நம் நாட்டைப் பொறுத்தவரை, பொறியியல் துறை குறித்து பெரிய புரிதல் இல்லை. பெரும்பாலும் நல்ல வேலைக்கு போய் கை நிறைய சம்பாதிப்பதற்கு ஒரு வழி என்றே அது பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் 200 கல்லூரிகள் ஒழுங்கான கட்டமைப்பு வசதி கொண்டிருக்கவில்லை. தகுதி வாய்ந்த பேராசிரியர்களை கொண்டிருக்கவில்லை என்கிற செய்திகள் உங்களுக்கு அதிர்ச்சி தரலாம். முதல் செமஸ்டர் தேர்வில் 22 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட முழுத் தேர்ச்சி அடையவில்லை என்பதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். கேம்பஸ் இன்டர்வியூவில் எத்தனை பேர்தான் படித்த துறையில் வேலைக்கு போகிறார் என்று கேட்டுப் பாருங்கள் பெரிய அதிர்ச்சியே மிஞ்சும்.
இத்தனைப் பொறியியல் கல்லூரிகள் இருந்தும் தரமான கல்வி என்பதைத் தர தவறிவிட்டோமா? எங்கே தவறி விட்டோம் என யோசித்தால் எண்ணற்ற காரணங்கள் வந்து முன்னே நிற்கும். புரிதலே இல்லாமல் பாடங்களை பள்ளிக் காலத்தில் படிக்க வைக்கப்படும் பிள்ளைகள், ஆர்வமூட்டமால் நகரும் வகுப்புகள், தான் படிக்கும் கல்வி தன்னை எதை நோக்கி செலுத்தும் என்கிற புரிதல் இல்லாமை, பெரும்பாலும் துறை சார்ந்த வேலைகளை அவுட் சோர்ஸிங் செய்து முடித்து கொள்ளுதல், செயல்வழி கற்றலாக இன்னமும் மெருகூட்டப்பட வேண்டிய பாடத்திட்டங்கள், பாடப் புத்தகத்தை தாண்டி வெளியே தேட மறுக்கிற மனோபாவம் என எண்ணற்ற சிக்கல்கள் இருக்கின்றன.

இதில் அடிப்படையான அதே சமயம் மிக முக்கியமான ஒரு சிக்கலை சிடுக்கு இல்லாமல் தீர்க்க முயலப்போகும் தொடர் தான் இது. எங்கே போகப் போகிறோம் என்கிற தெளிவும், எப்படி போகப் போகிறோம் என்கிற தெளிவும் இருந்தால் போதும் பயணத்தை நம்பிக்கையோடு துவங்கி விடலாம் என புத்தர் சொல்லுவார். அப்படி நம் மாணவர்கள் எடுக்கப்போகும் பொறியியல் துறை எதை பற்றியது, அதில் உள்ள அற்புதமான கூறுகள் என்ன, அத்துறையை படித்தால் என்னென்ன துறையில் பங்கு பெற முடியும், வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும், அத்துறையில் சிறப்பாக சாதிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை துறையில் அனுபவம் வாய்ந்த வல்லுனர்களின் பார்வையில், அதேசமயம் எளிமையான மொழியில் அணுகப்போகிறது இந்தத் தொடர்.

இந்தத் தொடரை எழுதப்போவது நானில்லை. நீங்கள் தான்; நீங்கள் எதை அறிய விரும்புகிறீர்களோ அதைத்தான் இந்தத் தொடர் பேசும். சிலசமயங்களில் இதையும் கொஞ்சம் பாருங்களேன் என உற்ற நலம் விரும்பியாக சில பரிந்துரைகளை தரும். போகப்போகிற பயணம் பெரிது. தொடர்ந்து உங்களின் கருத்துகள், பரிந்துரைகள், சந்தேகங்கள் எல்லாமும் இந்தத் தொடரை நமக்கான தொடராக ஆக்கும்.
 
சிவில் இன்ஜினீயரிங்

முதலாவதாக, சிவில் இன்ஜினீயரிங் எனப்படும் பொதுவியல் துறைப் பார்ப்போம்.  மற்ற பொறியியல் துறைக்கும் சிவில் துறைக்கும் அடிப்படையில் ஒரு மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. இந்தத் துறைக்கு வருகிற மாணவர்கள் சமூகத்தோடு நேரடியாக பழகும் வாய்ப்பு பெறப்போகிறவர்கள். ஆகவே, இந்தத் துறையில் ஏகத்துக்கும் சாதிக்கவும், மனநிறைவும் பெற விரும்பும் நபர்கள் வரலாம். சமூகத்தை பற்றிய பார்வையை கண்டிப்பாக வளர்த்துக்கொள்ள வேண்டும். அது என்ன என்பதை விரிவாகப் பேசுவோம்.

சிவில் என்ஜினீயரிங் படிப்புப்பற்றி, கிண்டி பொறியியல் கல்லூரியின் பொதுவியல் துறை பேராசிரியர் குழு அளித்த தகவல்கள்...

மனித குல வரலாற்றை மாற்றியதில் சிவில் துறைக்கு பெரிய பங்குண்டு. உண்மையில் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரு துறை அது. ஆகவே, இதை அனைத்து பொறியியல் பிரிவுகளின் அன்னை எனலாம். இந்த மனித குலம் எப்படிப்பட்ட இடர்ப்பாடுகளை கடந்து, எப்படி சிவில் துறையின் கைகோர்த்து பீடுநடை போட்டு முன்னேறியது என மாணவர்கள் யோசிக்க வேண்டும். அதற்கு அவர்கள் செய்யவேண்டியது வகுப்பறையாக உலகையே ஆக்கி கொள்வதுதான். கலையுணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள்.

சிவில் துறை என்றால் வெறும் சிமென்ட், செங்கல், கருங்கல், கட்டிடம்... இதுமட்டும்தான் இந்த துறை என்று நீங்கள் நினைத்தால், வெரி ஸாரி... ராக்கெட் ஏவுதலில்கூட ஒரு சிவில் வல்லுனரின் பங்கு இருக்கிறது. ஓர் அணு உலை உருவாக்கம் சிவில் துறை நிபுணர் இல்லாமல் நடக்க முடியாது. விமானத்தின் ஓடுதளம், சாலை, ரயில்வே, கட்டடங்கள் என எங்கெங்கு திரும்பினாலும் அதில் பொதுவியலின் பங்களிப்பு உள்ளது.

கட்டுமானம், மண்ணியல், நீர் மேலாண்மை, கட்டுமானப்பொருட்கள் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளைத்தான் பாடமாக படிப்பீர்கள். கணிதத்தில் மேதாவித்தனம் தேவை இல்லை என்றாலும் முயற்சி செய்து பார்க்கிற மனது கண்டிப்பாக வேண்டும். தர்க்கரீதியாக (analytical) விஷயங்களை அணுகுகிற பார்வை வேண்டும். புத்தாக்கத்துக்கான தாகம் வேண்டும். இந்த பண்பு ஒரே நாளில் வருவதில்லை. மாணவர்கள் பதில் சொல்பவராக மட்டும் இருக்க கூடாது. எண்ணற்ற கேள்விகள் கேட்க வேண்டும். தனக்குள்ளே கேட்டுக்கொள்ள வேண்டும். இதை செய்கிறபொழுது நீங்கள் வெற்றிகரமான பொதுவியல் வல்லுநர் ஆக ஆரம்பிப்பீர்கள். தொடர்ந்து கற்றுக்கொண்டே இருங்கள். கட்டடங்களை காதலியுங்கள். நின்று அவற்றை நோக்குங்கள்; இது எப்படி உருவாகி இருக்கும் என கேள்விகளை எழுப்பிக்கொள்ளுங்கள். இப்படி பார்க்கிற ஒவ்வொரு அமைப்பு. பொருள் என எல்லாவற்றையும் உங்கள் துறையோடு பொருத்திப்பாருங்கள்.

நம்ப மாட்டீர்கள்... உலகை மாசுப்படுத்தும் கழிவுகளில் மூன்றில் ஒரு பங்கு திடக் கட்டட கழிவுகள். இதை எப்படி மறு சுழற்சி செய்யும் பொருட்களால் கட்டமைப்பது என்பது நம்முன் உள்ள சவால். இதை நோக்கியும் உங்களில் சிலர் பயணப்படலாம். உணவு, சுகாதாரம், குடிநீர், கழிவறை கூடவே உபயோகமான வேலை செய்யும் வாய்ப்புகளை உண்டு செய்து தருதல் ஆகியவற்றை செய்கிற சமூகமே வளமான சமூகம் என உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. இது ஒவ்வொன்றிலும் மிக முக்கியமான பங்களிப்பை பொதுவியல் கற்றவர்களே செய்ய முடியும். ஆக, சமூக நலம் நாடும் பார்வை, சமூகத்தின் சிக்கல்களை தீர்ப்பதற்கான மனது மிக மிக முக்கியமான ஒன்று.

கல்வி என்பதை பொருட்தேவையாக புரிந்து கொள்ள பிள்ளைகளை பழக்கி இருக்கிறோம் நாம். அது பண்பாட்டு தேவை. அது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் பாதையில் பயணிக்க வேண்டும். அதை செய்யும் எண்ணம் உள்ள மாணவர்கள் இந்த துறைக்கு வரவேண்டும். புதியதை செய்து தோல்விகள் இன்னல்களை சந்தித்தாலும் காலப்போக்கில் பொருளும், வெற்றியும் இங்கே கண்டிப்பாக கிட்டும். வாய்ப்புகள் குறையாத ஒரு துறை இது.

இறுதியாக, மேற்படிப்பு என்று வரும்பொழுது நூற்றுக்கும் மேற்பட்ட பிரிவுகள் பொதுவியல் துறையில் உள்ளன என்பதே அதன் முக்கியத்துவத்தை விளக்கும். அதிலும் trans disciplinary எனப்படும் பொறியியல் அல்லாத துறைகளின் படிப்புகளோடு இணைந்து படிக்கும் மேற்படிப்புகளில் கொட்டிகிடக்கும் வாய்ப்புகள் ஏராளம்.

சிவில் துறை என்பது வேர் போன்றது. ஐடி துறை போல கனியே, பூவே எனப் புகழ் தராது. ஆனால், அது தவிர்க்க முடியாத ஆணிவேர். புகழ் தேடாத சேவை மனப்பான்மை உள்ளவர்கள் மனநிறைவோடும், பாடத்தைப் புரிந்துகொண்டு வாழ்க்கையோடு ஒட்டி கற்பவர்கள் சாதிக்கவும் வழிகோலும் மந்திரச் சாவி இது.

(இன்னும் அறிவோம்...)
- பூ.கொ.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக