அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

கல்வி குறித்து ஒரு ஆலோசனை

+2 தேர்வு முடிந்தவுடன், கல்வி வழிகாட்டல் குறித்து நேற்றும், அலைபேசி வழியாகவும் பலரும் தொடர்பு கொள்கிறார்கள்.
பெரும்பாலும் பொறியியல் படிப்பு குறித்தே எல்லோரும் ஆவலோடு கேட்கிறார்கள். பொறியியல் படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால்,
உள்நாட்டில் வேலை செய்ய விரும்புபவர்கள், எதிர்காலத்தில் கடும் போட்டியை சந்திக்க நேரிடும்.
இன்று இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமான பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அமெரிக்காவில் ஒரு வருடத்தில் படிப்பை முடித்து வெளியேறும் பொறியாளர்களை விட, தமிழகத்தில் உருவாகும் பொறியாளர்கள் அதிகம்.
தேவைக்கு அதிகமாக உருவான பொறியியல் கல்லூரிகள், வகுப்புகள் எடுக்க தகுதியான பேராசிரியர்கள் இல்லை. கல்வித்தரம் மிகவும் மோசமாக உள்ளது.தேர்ச்சி விகிதம் அதைவிட மோசமாக உள்ளது.
மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளதால், வடஇந்திய மாணவர்களைக் கவரும் வகையில் செயல் திட்டங்களை முடுக்கி விட்டுள்ளன பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள்.
கடந்தாண்டு சில பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. சில நிறுவனங்கள் வேறு துறை கல்விக் கூடங்களாக மாறுகின்றன.
இந்த வருடம் பல பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு வந்துள்ளன. ‘ரியல் எஸ்டேட்’ புரோக்கர்கள் கூவி, கூவி தேடி வருகிறார்கள்.
பொறியியல் கல்லூரிகளை வழிநடத்தும் அண்ணா பல்கலைக்கழகம் 2.50 லட்சம் விண்ணப்பங்களை அச்சிட்டது. அதில் 2.20 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே விற்பனையானது. அதில் முழுமையாக 2 லட்சம் விண்ணப்பங்கள் கூட வந்து சேரவில்லை.
சென்ற ஆண்டை விட பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு குறைந்திருக்கிறது.
இந்நிலையில் கலைக் கல்லூரிகளின் பக்கம் மக்களின் கவனம் திரும்பியுள்ளது. பி.ஏ. ஆங்கில இலக்கியம் முன்பு கேட்பாரற்று கிடந்தது. இப்போது அதில் இடம் கிடைப்பதற்கு பரிந்துரைக் கடிதம் கேட்டு வருகிறார்கள்.
பி.காம், பி.ஏ. கார்ப்பரேட் போன்ற கலைக்கல்லூரி படிப்புகளுக்கு மட்டுமே வரவேற்பு எப்போதும் போல் உள்ளது. பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் செல்வாக்கை இழந்துவிட்டது.
பி.ஏ. சமூகவியல், பி.ஏ. பொருளாதாரம் போன்ற படிப்புகள் நோக்கியும் மாணவர்களின் கவனம் திரும்பியுள்ளது.ஆனால், பி.ஏ. வரலாறு, பி.ஏ. தமிழ் படிப்புகளுக்கான வரவேற்பு குறைந்து வருகிறது.
பி.ஏ. வரலாறு என்பது சமூகப் பொறுப்பு வாய்ந்த அரசு வேலை வாய்ப்புகளை உள்ளடக்கியது என்பதை விளங்க வைக்கும் கடமை நமக்கு உள்ளது.
பி.ஏ. சமூகவியலைப் போலவே பி.ஏ. வரலாறும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிப்புகளுக்கான அடித்தள கல்வியை அளிக்கக்கூடியது.
அதுபோல பி.எஸ்சி பயோ கெமிஸ்ட்ரி, பி.எஸ்சி மைக்ரோ பயாலஜி போன்ற கலைக்கல்லூரிகளின் பக்கமும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். இவை எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகளைத் தரும் படிப்புகளாகும்.
பெண்களுக்கான படிப்பைப் பொறுத்தவரை, அவர்கள் எதிர்காலத்தில் வேலைக்கு செல்வதற்காகப் படிக்கிறார்களா? அல்லது குடும்பத்தை வழிநடத்த ஒரு டிகிரி படிப்பு தேவை என்பதற்காகப் படிக்கிறார்களா? என்பதைத் தீர்மானித்து அவர்களுக்கான கல்வியைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
படித்து முடித்துவிட்டு வீட்டிலேயே ‘குடும்பத்தலைவி’ ஆக இருக்க விரும்பும் பெண்கள் பி.காம், பி.ஏ. கார்ப்பரேட், பி.ஏ. ஆங்கில இலக்கியம் போன்ற மொழி சார்ந்த படிப்புகள், பி.ஏ. பொருளாதாரம், பி.ஏ. சமூகவியல் போன்ற படிப்புகளைத் தேர்வு செய்வது குறித்து யோசிக்கலாம்.
கல்வி என்பது ஒரு பெருங்கடல். யாரும் எதையும் கற்கலாம்.
ஆனால் என்ன படிக்க வேண்டும்-? எங்கு படிக்க வேண்டும்? நாம் தேர்ந்தெடுக்கும் துறையின் எதிர்காலம் எப்படி? தேர்ந்தெடுக்கும் துறை நமது அறிவுத்திறனுக்கு ஏற்றதா? நம்மால் அதை நிறைவு செய்ய முடியுமா? என்பது குறித்தெல்லாம் நன்றாக ஆய்வு செய்து பிறகு சரியான முடிவை எடுக்க வேண்டும்.
பெற்றோரின் நிர்பந்தத்திற்காகப் படிப்பதை விட, நம்மால் எது முடியும்? என்று சுய ஆர்வத்தின் அடிப்படையில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இதில் பெற்றோர்களும், நண்பர்களும் ஆலோசகர்களாக மட்டுமே இருக்க வேண்டும்.
-எம். தமிமுன் அன்சாரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக