அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

என்ஜினீயரிங் கவுன்சலிங்கை எதிர்கொள்வது எப்படி?

மோ. கணேசன்

 தமிழ்நாட்டில் உள்ள  பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக நடத்தப்படும் கவுன்சலிங் நடைமுறைகள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார் பொறியியல் மாணவர்  சேர்க்கைப் பிரிவு செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ்...


மாணவர்கள், தங்களது விண்ணப்பம் முறைப்படி போய் சேர்ந்ததா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டதா, முறையாக பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறதா, ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் பதிவு செய்துவிடுவோம். மாணவர்கள் தங்களது விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தி, தங்களது விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். இப்படி இணையத்தில் மாணவர்களின் தகவல்களை பார்க்கும்போது, ஏதேனும் தவறுகள் இருந்தால், அதை உடனே அங்கு குறிப்பிட்டிருக்கும் மின்னஞ்சல் மூலமாகவோ, அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் தொலைபேசி உதவி எண்களை அழைத்தோ திருத்தம் செய்யச் சொல்ல முடியும்.
 
இவை எல்லாம் முடிந்த பிறகு தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு, எந்த தேதியில், எந்த நேரத்தில் கவுன்சலிங் தொடங்கும் என்பன தகவல்கள் அடங்கிய அழைப்புக் கடிதம் (கால் லெட்டர்) தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும். மேலும், அவர்களது மொபைல் போனிற்கு எஸ்.எம்.எஸ். மூலமாகவும் தகவல் அனுப்பப்படும். இந்த எஸ்.எம்.எஸ்ஸை கவுன்சலிங் முடியும் வரை, மாணவர்கள் அழிக்காமல் வைத்திருக்க வேண்டும்.

அழைப்புக் கடிதம்  வராமல்  போனாலோ அல்லது மாணவர் அதை   தவறவிட்டுவிட்டாலோ என்ன செய்வது?

அழைப்புக் கடிதம் என்பது கவுன்சலிங்கிற்கு வரும் மாணவர்களுக்கு தேவைப்படும் முக்கியமான கடிதம் ஆகும். அதை மாணவர்கள் கவனக்குறைவாக தவறவிட்டுவிடக் கூடாது.  அதுபோன்ற நிலையில், கவுன்சலிங் நடைபெறும் நாளில், அவர்களுடைய கவுன்சலிங் நேரத்திற்கு இரண்டு, மூன்று மணி நேரம் முன்னதாக வந்து, பல்கலைக்கழகம் அனுப்பிய எஸ்.எம்.எஸ் மூலம் கவுன்சலிங் தகவலைக் காண்பித்து,  ‘டூப்ளிகேட் கால் லெட்டரை’ பெற்றுக் கொள்ளலாம்.

கவுன்சலிங்கின்போது என்னென்ன சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும்?

உங்களுக்கு என்று வழங்கப்பட்ட கால் லெட்டர், பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ், பள்ளியில் வழங்கப்பட்ட மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை எடுத்துவர வேண்டும். சிறப்புப் பிரிவுகளின் கீழ் இடம் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதற்காகப் பெறப்பட்ட சான்றிதழ்களை எடுத்துவர வேண்டும்.
 
அதாவது,  அண்ணா பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ள மாதிரிப்படிவத்தில் உள்ளதைப் போல் சான்றிதழ்கள் இருக்கவேண்டும். முதல் தலைமுறைப் பட்டதாரி என்றால் தகுதி வாய்ந்த அரசு அலுவலர் மூலம் பெறப்பட்ட சான்றிதழ், முன்னாள் ராணுவத்தினர், படைப்பிரிவினர் வாரிசு என்றால் அதற்கான சான்றிதழ், விடுதலைப் போராட்ட வீரரின் வாரிசு என்றால் அதற்கான சான்றிதழ், மாற்றுத் திறனாளிகள் என்றால் அவர்களுக்கென வழங்கப்பட்ட சான்றிதழ், விளையாட்டு வீரர்கள் என்றால் அதற்கான போட்டிகளில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களையும் எடுத்து வர வேண்டும்.

கல்லூரிகளைத் தேர்வு செய்யும் போது மாணவர்கள் எந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் நல்லது?
உங்கள் கட் ஆஃப் மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து உங்களுக்கு எந்தெந்தக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்பதை அனுமானித்து விடலாம். கல்லூரிகளைத் தேர்வு செய்வதற்கு முன் எந்த கல்லூரியில் சேர விரும்புகிறீர்களோ அந்த கல்லூரிக்கு நேரடியாகச் சென்று அங்கு படித்துக் கொண்டிருக்கும் சீனியர் மாணவர்களை சந்தித்து பேசுங்கள். அந்த கல்லூரி எப்படி இருக்கிறது? அடிப்படை வசதிகள் எப்படி? கல்லூரி நூலக வசதி எப்படி? கல்வித் தரம் எப்படி? கேம்பஸ் இண்டர்வியூ இருக்கிறதா? உள்பட அனைத்து தகவல்களையும் விசாரித்துக் கொள்ளுங்கள். இந்த விடுமுறையை கல்லூரிகளைப் பார்வையிடுவதற்கும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
 
இதன்மூலம் நல்ல கல்லூரிகளை அடையாளம் கண்டுகொள்ள முடியும். உங்களது நண்பர்கள் படிக்கிறார்கள் என்பதற்காக இந்த கல்லூரியில்தான், இந்த படிப்பில்தான் இடம் வேண்டும் என்பதை தவிர்த்துவிட்டு, உங்களுக்கு பிடித்தமான துறையில், நல்ல கல்லூரியில் சேருவது குறித்து யோசிப்பது பயனுள்ளதாக இருக்கும். ஏற்கெனவே என்ஜினீயரிங் படித்த மாணவர்களை கலந்தாலோசிப்பதும் பயனைத் தரும். உங்கள் குடும்ப பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப திட்டமிட்டு செயல்படுங்கள்.

கவுன்சலிங்கின் போது மாணவர்கள் செலுத்த வேண்டிய கட்டணம் எவ்வளவு?

கவுன்சலிங்கின்போது பொதுப்பிரிவு மாணவர்கள் ‘இனிஷியல் டெபாசிட்’ ரூ. 5 ஆயிரமும், தமிழ்நாட்டைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், அருந்ததியர் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் படிப்புக் கட்டணத்திலிருந்து கழிக்கப்பட்டு விடும். கட்டணத்தை கவுன்சலிங்கிற்கு வரும்போது ரொக்கமாக செலுத்தலாம். இல்லையெனில் ‘Secretary, TNEA  - 2014’ என்ற பெயரில், சென்னையில் மாற்றத்தக்க வகையில் டிமாண்ட் டிராப்ட் எடுத்து, அதன் மூலமும் கட்டணத்தைச் செலுத்தலாம்.
 
வேறு எந்த முறையிலும் கட்டணத்தைச் செலுத்த முடியாது. உங்களது  அழைப்புக் கடிதத்தை இங்குள்ள பதிவர்களிடம் கொடுத்து, அதனுடன் ரொக்கமாகவோ, டிமாண்ட் டிராப்ட் மூலமாகவோ கட்டணத்தைச் செலுத்த வேண்டும். கட்டணத்தை செலுத்தியதும், அங்கேயே மாணவர்களுக்கு ‘கவுன்சலிங் படிவம்’ தருவார்கள். அதை எடுத்துக் கொண்டு ‘கவுன்சலிங் ஹாலிற்குள்’ மாணவர் செல்ல வேண்டும்.

கவுன்சலிங்கிற்கு மாணவருடன் யாரை அழைத்துச் செல்ல வேண்டும்?

கவுன்சலிங்கிற்கு வரும் மாணவர்கள் தங்களுடன் பெற்றோரில் யாரேனும் ஒருவரை அழைத்துச் செல்லலாம். அப்போதுதான், தகுந்த படிப்பையும், கல்லூரியையும் தேர்வு செய்ய வசதியாக இருக்கும். பெற்றோர் வர இயலாத நிலையில் பாதுகாவலராக மூத்த சகோதர, சகோதரிகள், உறவினர்களில் யாரேனும் ஒருவரை அழைத்துச் செல்லலாம். இவர்களைத் தவிர, வெளியாட்கள் யாரையும் மாணவர்கள் அழைத்துச் செல்லக் கூடாது. படிக்காத பெற்றோராக இருக்கிறாரே அவருக்கு ஒன்றும் தெரியாது என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு முகம் தெரியாத வெளியாட்களை கவுன்சலிங்கிற்கு மாணவர்கள் உடன் அழைத்துச் செல்ல வேண்டாம். அவர்கள் உங்களுக்குத் தவறான வழியை காட்டி விடக் கூடும் என்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும்.

கவுன்சலிங் நடைபெறும் நாளில் மாணவரால் வரமுடியாமல் போனால் என்ன செய்வது?

கல்லூரியையும் படிப்பையும் தேர்வு செய்ய கவுன்சலிங்கிற்கு சம்பந்தப்பட்ட மாணவர்கள் வர வேண்டியது அவசியம். குறிப்பிட்ட தேதியில் அல்லது குறிப்பிட்ட நேரத்தில் அவரால் வர முடியவில்லை என்றால், அவருடைய கட் ஆஃப் மதிப்பெண்ணிற்குரிய இடத்தை இழந்து விடுவார். மாணவர் வரும் நேரத்தைப் பொருத்து, அப்போதுள்ள இடங்களில் அவருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு, முதல் ஆளாக கவுன்சலிங்கிற்கு அனுப்பி வைக்கப்படுவார் அவருக்கு திடீர் உடல்நலக் கோளாறோ அல்லது வேறு ஏதேனும் தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டால், அவர் பரிந்துரைக்கும் ஒருவர் இந்தக் கவுன்சலிங்கிற்கு வரலாம்.
 
உதாரணத்திற்கு, உடல்நலம் சரியில்லை போன்ற தவிர்க்க முடியாத காரணங்களால் சம்மந்தப்பட்ட மாணவரால் கவுன்சலிங்கிற்கு வரமுடியாத நிலையில், அவரது அப்பாவையோ, அம்மாவையோ, அண்ணனையோ, அக்காவையோ அனுப்பி வைக்கலாம். அப்படி, அந்த மாணவர் சார்பில்  யார் வருகிறார்களோ, அவரது புகைப்படத்தை ஒரு வெள்ளைத்தாளில் ஒட்டி, கலந்தாய்விற்கு எதனால் வர இயலவில்லை என்ற காரணத்தைக் குறிப்பிட்டு, எனக்கு பதிலாக என்  சார்பில் இவர் இந்தக் கலந்தாய்வில் கலந்து கொள்வார். இவர் தேர்வு செய்யும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவை முழுமனதோடு ஏற்றுக் கொள்கிறேன் என்று எழுதி, கையெழுத்திட்டுத் தரவேண்டும். மாணவருக்கு பதிலாக அந்த மாணவர் குறிப்பிடும் நபர் அனைத்து மூலச் சான்றிதழ்களையும், கட்டணத்தொகையையும் எடுத்துக் கொண்டு, கவுன்சலிங்கில் பங்கேற்கலாம்.

கவுன்சலிங்கிற்கு வரும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

 சென்ற ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் உங்களது தற்போதைய கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு எந்த படிப்பு கிடைக்கும், எந்த கல்லூரி கிடைக்கும் என்பதை உத்தேசமாக அனுமானிக்க முடியும். அதன் அடிப்படையில் உங்களது உத்தேச கல்லூரி மற்றும் பாடப்பிரிவு பட்டியலைத் தயார் செய்து வைத்துக் கொள்வது நல்லது. கவுன்சலிங் நடக்கும் நேரத்திற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக மாணவர் வந்து விடவேண்டும். கவுன்சலிங் நடைபெறும் நாட்களில், எந்தெந்த கல்லூரிகளில் எவ்வளவு காலி இடங்கள் உள்ளன என்ற விவரங்களை, ஒரு நாளைக்கு 8 முறை, இணையதளத்தில் அப்லோடு செய்துவிடுவோம். அங்குள்ள கவுன்சலிங் அறையிலும் இதனைப் பார்க்கலாம்.

கவுன்சலிங்கிற்கு வரும்போது அனைத்துச்  சான்றிதழ்களையும் தவறாமல் எடுத்து வர வேண்டும். அங்குள்ள கவுன்டரில் இன்ஷியல் டெபாசிட் பணத்தைச் செலுத்தி கவுன்சலிங் படிவத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். கால் லெட்டர் மற்றும் கவுன்சலிங் படிவம் ஆகியவற்றை சரிபார்த்து, கவுன்சலிங் ஹாலில் மாணவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் உடன் அமர வைக்கப்படுவார். அங்கு கவுன்சலிங் நடைமுறைகள் விளக்கப்படும். அதன் பிறகு மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவார்கள். அப்போது, அம்மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தில் ஏதேனும் தவறான விவரங்கள் இருந்தால்,  அங்குள்ள அலுவலர்களிடம் ஆதாரத்துடன் தெரிவித்து, தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம். இதன் பிறகு மாணவர்கள் கவுன்சலிங் நடைபெறும் கலந்தாய்வுக் கூடத்திற்குள் மாணவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்.

கலந்தாய்வு அறையில் 50 கம்ப்யூட்டர்களும், அதற்கான ஆபரேட்டர்களும் அமர்ந்து இருப்பார்கள். ஆபரேட்டர் அருகே உள்ள நாற்காலியில் அமர்ந்து கொள்ளவேண்டும். ஒரே பெயரில் பல கல்லூரிகள் இருப்பதால் மாணவர்கள் சேர விரும்பும் கல்லூரி எண்ணுடன் கல்லூரியின் பெயரையும் சேர்த்துக் கூற வேண்டும்.  விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடப்பிரிவைத் தேர்வு செய்ய வேண்டும். அப்புறம், உறுதி மொழி படிவத்தில் (டிக்ளரேஷன் பார்ம்) கையெழுத்திட வேண்டும். அதன்பிறகு, எக்காரணத்தைக் கொண்டும் கல்லூரியையோ பாடப்பிரிவையோ மாற்ற முடியாது.

கவுன்சலிங்கிற்கு முன்னால் ஏதேனும் ஒரு கலைக்கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?

கவுன்சலிங் மூலம் அட்மிஷன் பெறுவதற்கு முன்னதாக சில மாணவர்கள் தங்களிடம் உள்ளிட சான்றிதழ்களைக் கொடுத்து கல்லூரிகளில் சேர்ந்திருக்கலாம். அந்த மாணவர்கள் அட்மிஷன் பெற்ற கல்லூரியிலிருந்து ‘போனபைடு சர்ட்டிபிகேட்’ வாங்கி வந்து காண்பித்தால் போதும். அவருக்கு கவுன்சலிங் மூலம் அட்மிஷன் வழங்கப்படும். அதேசமயம், அட்மிஷன் சான்றிதழ் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரியிலிருந்து பெற்று அனைத்துச் சான்றிதழ்களையும் பெற்று கொண்டு வந்து காண்பித்து அட்மிஷன் கடிதத்தைப் பெற்றுச் செல்லலாம்.

கவுன்சலிங்கிற்கு வரும் மாணவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இடைத்தரகர்களிடம் மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இடைத்தரகர்களைத் தடுப்பதற்கென்ற பலவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். மாணவர்கள் அவர்களை அடையாளம் கண்டுகொண்டால், அங்கே உள்ள காவல் துறை நண்பர்களிடம் தெரிவிக்கலாம். வீட்டில் இருந்து, தங்களது குடும்பச் சூழலுக்கு ஏற்ப குறிப்பிட்ட படிப்பில், குறிப்பிட்ட கல்லூரியில் சேர வேண்டும் என்ற எண்ணத்தோடு வருபவர்களை, இடைத்தரகர்கள் இடையில் புகுந்து குழப்பி, அவர்களுக்கு பிடித்த கல்லூரியில் சேர வைத்து விடுவார்கள். மேலும், படிக்காத பெற்றோராக இருப்பின், அவருக்கு பதிலாக நான் வருகிறேன். என்னை உங்களது உறவினர் என்று சொல்லுங்கள் என்றுகூறி அவர்களது கல்லூரியில் உங்களை சேர்த்துவிடுவதற்கும் வாய்ப்பு உண்டு. மாணவர்கள்தான்  விழிப்போடு இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக