அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

நம்மாழ்வார்: புத்தாண்டில் விதைக்கப்படும் இயற்கை விதை!

எழுபத்தைந்து வயது இளைஞர். தன்னிடம் பத்து வயது சிறுவன் பேசினாலும், "சொல்லுங்கய்யா...!" எனக்கேட்கும் பரிவு. விவசாயிகளுக்கு இடர் என்றால் ஓடோடி வந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்த நம்மாழ்வார் இன்று நம்மோடு இல்லை.
டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்ததும், தனது போராட்டத்தை டெல்டாவில் தொடங்கினார். கடந்த ஒரு வருடத்தில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டத்தை நடத்தியவர். தனது இறப்பிற்கு முதல்நாள் வரை போராடியவர்.

கடந்த 2ஆம் தேதி டெல்டா மாவட்டங்களுக்கு வந்தவர் தஞ்சாவூர் மாவட்டம், பிச்சினிக்காட்டில் இருக்கும் லெனின் என்பவரது வீட்டில் தங்கி இருந்திருக்கிறார். லெனினும் மீத்தேன் எரிவாயு விற்கு எதிராக குரல் கொடுப்பவர். ஆறாம் தேதி வரை அங்கிருந்தவர் அடுத்து மன்னார்குடி, கும்பகோணம் என ஆங்காங்கே தங்கி தனது எதிர்ப்பு குரலை கொடுத்திருக்கிறார்.

கடந்த சனிக்கிழமை திருப்பணந்தாள், சுவாமிமலை போராட்டங்களை நடத்தியவர் உடல் களைப்போடு பிச்சினிக்காடு வந்திருக்கிறார். அவரைப் பார்த்த லெனின் உங்களுக்கு இப்போது ஓய்வு அவசியம் தேவை. எனவே ஓய்வெடுங்கள் என எவ்வளவோ சொல்லியும், "இல்லய்யா நான் ஞாயிற்றுக்கிழமை தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்துல நடக்குற புத்தக வெளியீட்டு விழாவுக்கு வர்றேன்னு சொல்லிட்டேன், போய்ட்டு வந்துர்றேன்!" என்றிருக்கிறார்.

எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காமல் பழ.கோமதிநாயகம் எழுதிய "நீரின்றி அமையாது உலகு" எனும் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுவிட்டு பிச்சினிகாட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது அவருக்கு தெரியாது இதுதான் நமக்கு கடைசி நிகழ்ச்சி என்று. தொடர் போராட்டங்களும், பயணமும் அவரது உடலை வாட்டி எடுக்க, திங்கள் கிழமை காலை முதலே வெயிலில் படுப்பதும், நிழலில் படுப்பதுமாக இருந்திருக்கிறார். அவ்வப்போது தொடு சிகிச்சையும் எடுத்துக்கொண்டிருக்கிறார். அத்துடன் நீர் ஆகாரத்தை மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கிறார். இரவு ஏழு மணி அளவில் அரை இட்லியும் தேங்காய் பாலும் வேண்டும் என சொல்ல, கொடுத்திருக்கிறார்கள். அதை உண்டவர் படுக்கவும் முடியாமல் உட்காரவும் முடியாமல் அவதிப்பட்டிருக்கிறார். சரியாக எட்டு இருபது மணிக்கு  இயற்கைஎய்தினார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் பிறந்திருந்தாலும், கரூர் மாவட்டம், கடவூரில் வானகம் எனும் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தை நடத்தி வந்திருக்கிறார். அது தொடர்பான நிறைய புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். மனைவி சாவித்திரி, மகள் மீனா ஆகியோர் தஞ்சாவூரில் வசித்தாலும் நம்மாழ்வார் மட்டும் தமிழகம் மட்டுமல்லாது சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று தனக்கு தெரிந்த வேளாண்மை சம்பந்தப்பட்ட விசயங்களை எடுத்து சொல்லி வந்திருக்கிறார்.

அப்படிப்பட்டவர் கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்தே, தான் இறந்தால் தான் வசிக்கும் வானகத்தில் தம்மை அடக்கம் செய்யுங்கள் என சொல்லி வந்திருக்கிறார். அவரது கடைசி ஆசையை நிறைவேற்றும் விதமாக அவரது உடல் கரூர் மாவட்டத்தில் இருக்கும் கடவூருக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது உயிர் பிரிந்தாலும் ஆன்மா மட்டும் விவசாயிகளின் நலனிற்காக விவசாயிகளை சுற்றிக்கொண்டிருக்கும் என்பதுமட்டும் உண்மை.

வீ.மாணிக்கவாசகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக