என்னை செதுக்கிய ஆசிரியர்கள்5

கணிணியியல் 
த்தொடரில் நல்லாசிரியர்கள் பற்றி இது வரை வெளியான நண்பர்களின் பதிவுகளில் இருந்து இக்கட்டுரை சற்று மாறுபட்டதோர் கோணத்தில் அமைந்து விட்டது என நினைக்கிறேன். மாணவர்கள் பால் பரிவும், அக்கறையும் கொண்ட ஒரு நல்லாசிரியரை பற்றி பேசுவது ஒரு வகை. வினவு பாணியிலானது. ஒரு செடி தன் மீது பரிவும், அக்கறையும் கொண்டு தன்னை வளர்த்த ஒரு தோட்டக்காரரை பற்றி எழுதுவது போல. மாறாக, ஒரு செடி தனக்கு ஒளி தந்த சூரியனை போற்றி ஆதித்ய ஹிருதயம் பாடும் வைகையில் பேசுவது மற்றொரு வகை . இந்த இரண்டாவது வகையில், எனக்கு கல்விப்புல ரீதியாக வழிகாட்டிய நல்லாசான்கள் பற்றியது இப்பதிவு.

பள்ளிப் படிப்பு முழுதும் செங்கல்பட்டில் படித்தேன். முதலில் ராமகிருஷ்ணா பள்ளி. பின்பு புனித சூசையப்பர் பள்ளி. இரண்டும் அரசு உதவி பெறும் நிறுவனங்கள். ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி. பின்பு ஆங்கில வழியில். பள்ளிக் கூடத்தில் எனக்கு கிடைத்த பல நல்ல ஆசிரியர்கள் மனதில் நிழலாடுகின்றனர். கணித ஆசிரியர் ராகவ சிம்மன், அறிவியல் ஆசிரியர் ராமகிருஷ்ணன், இயற்பியல் ஆசிரியர் மகாலிங்கம், தமிழாசான் மரிய ஜோசப். கட்டுரையின் நோக்கம் எனது கல்லூரிப் பருவம் பற்றி ஆதலால், விரிக்காமல் மேலே செல்வோமாக.
பள்ளியில் பாடங்களை ஆர்வத்தோடு, உள்வாங்கிப் படித்ததாக சொல்லிக் கொள்ள முடியாது. தேர்வு சமயத்தில் மதிப்பெண்களை குறி வைத்து முக்கிய கேள்விகளை படிக்கும் பாணி படிப்புதான் பெரிதும் நடந்தது. குறிப்பாக பனிரெண்டாம் வகுப்பு. ஒவ்வொரு பாடத்தையும் அக்கு வேறு ஆணிவேராக பிரித்து போட்டு படித்தால் எந்த கேள்விக்கும் பதில் எழுத முடியும். இப்படி எல்லாம் தேர்வுக்கு தயார் செய்தால் மதிப்பெண்கள் அருவி மாதிரி கொட்டும். பக்கெட்டில் பிடித்துக் கொள்ளலாம். பொதுக் கருத்துக்கு மாறாக, இவ்வாறு தயாராக தனிப்பயிற்சி (tuition) எதுவும் தேவையில்லை. நமக்கு நாமே திட்டத்தின் மூலம் சொந்தமாக கூட செய்ய முடியும்.
இவ்வாறு டெக்னிகலாக பின்னிப் பெடலெடுத்து படித்ததில், அண்ணா பல்கலை கிண்டி பொறியியல் கல்லூரியில் கணிணியியல் துறையில் இடம் கிடைத்தது. அங்கு கிடைத்த நண்பர்களின் பயனால், தேர்வுகளை மீறி புரிந்து படிப்பது, சிந்திப்பது போன்ற விஷயங்களும் உள்ளன என தெரிய வந்தது. இத்தகு சமயத்தில் முன்ஜென்ம புண்ணியத்தின் பலனாக என் கல்விப்புல வளர்ச்சியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இருவர் தொடர்பு ஏற்பட்டது.
முதலாமவர் எனது ஆத்ம நண்பர் வெங்கட்ராகவன். இவர் பாடங்களை உள்வாங்கி, சிந்தித்து படிக்கும் படிக்கும் பரம்பரையை சார்ந்தவர். துறை சார்ந்த கல்வி என்பதையும் கடந்து பல விஷயங்களும் அறிந்த சூரப் புலி. எங்களது பின்புல வேறுபாடுகளையும் மீறி நட்பு வளர்ந்ததில் அறிவு ரீதியாக பாடங்கள் படிக்கும் வழக்கம் பிறந்தது. அந்தப் பூவோடு சேர்ந்ததில் இந்த நாருக்கும் சற்று வாசனை கிடைத்தது. கல்லூரி பாடங்கள் தவிரவும் மற்ற பல விஷயங்களும் விவாதிப்பதுண்டு. அவரது வீட்டிலேயே தங்கி, உண்டுறங்கி, கல்லூரி செல்லும் வழக்கமும் இருந்தது. இருபது வருடங்கள் கடந்தும் மழுங்காமல் இன்றும் நட்பு தொடர்கிறது..
இந்த வேளையிலே எங்களுக்கு Computer Organization என்றொரு பாடம். சொல்லித்தந்தவர் பேராசிரியர் ஸ்ரீதர் கந்தசாமி. ஒரு கணிணியிலே முக்கிய உறுப்பு (component) CPU. இதன் அடிப்படைகூறு கேட்டுகள் (gates) எனப்படுபவை. இந்த கேட்டுகள் எவ்வாறு இயங்குகின்றன என்பது மின்னணுவியல் (electronics) துறையின் கீழ் சென்று விடும். அதைப்பற்றி பேசாமல் கேட்டுகளை தென்னாடுடைய ஈசன் படைத்தான் என வைத்துக் கொண்டு ஒரு எளிய வகை CPU வடிவமைப்பது பாடத்தின் நோக்கம். ஒரு விஷயத்தை முற்றுணர்ந்த ஒருவர் பாடம் நடத்தினால் எப்படி இருக்கும் என உணர்ந்த முதல் தருணம். முதல் நாள் “ஆதியில் கேட்டுகள் இருந்தன” என்று தொடங்கியவர் படிப்படியாக வளர்த்து சில மாதம் கடந்து “ஆமென்” என்று சொல்லி முடித்த போது என் கையில் ஒரு CPU இருந்தது. மதிப்பெண்கள், தேர்வுகள் பற்றி மட்டுமே அக்கறை என்பதை மாற்றி, வாழ்க்கையில் முதல் முதலாக ஒரு விஷயத்தை உள்வாங்கி சிந்திக்க வைத்தவர். தேர்வுக்கு தயாராவது என்பது அலட்டல் இல்லாத வேலை ஆனது. தேர்வுக்கு முன்னால் அவரது வகுப்பில் வெங்கட்ராகவன் எடுத்த குறிப்புகளை சில மணி நேரம் புரட்டி விவாதிப்பது மட்டுமே தயாராகும் வழிமுறை. முதல் தீப்பொறி கொடுத்தவர் என்ற வகையில் மறக்க முடியாத ஆசிரியர்.
கல்விப்புல ரீதியாக எனக்கு அடுத்து உதவியது ஒரு புத்தகம். ஜான் ஹாப்கிராப்ட் (John Hopcroft) மற்றும் ஜெப்ரி உல்மன் (Jeffrey Ullman) என்ற இரு புகழ் பெற்ற பேராசிரியர்கள் எழுதிய கிளாசிக் வகையிலான ஒரு நூல். கணிணியியல் துறைகளை எளிமைப்படுத்தி இரண்டு வகையில் பிரிக்கலாம். ஒன்று கணிணி வடிவைமப்பு, பல்வேறு மென்பொருள் வடிவமைப்பு என பயன்பாடு என்பதை முக்கிய நோக்கமாக கொண்டு உலகாயதமாக செல்வது. இவற்றை systems என அழைக்கக் கூடும். இரண்டாவது வகையில் பயன்பாடு என்பதை இரண்டாம் பட்சமாக்கி, கணிணியியலின் அடிப்படை கேள்விகளை கணித ரீதியில், ஒரு தத்துவ நோக்கில் ஆராய்வது. இதை theory என அழைப்பர். இதில் இரண்டாவது வகையான Theory of Computing என்ற துறைக்கு பால பாடம் நடத்துவது இந்த புத்தகத்தின் நோக்கம். உச்சி மோந்து நிலாச்சோறு கதை சொல்லும் புத்தகங்களுக்கு மத்தியில், உச்சி மண்டையில் ஓங்கி அடித்து ஆழமாக பேசும் வகையிலான புத்தகம். குறிப்பாக பாடங்களின் பின் கொடுக்கப்படும் கேள்விகள். சாதாரண பயிற்சி கேள்விகள் முடிந்தபின் மண்டை காய வைக்கும் பல புதிர்களும், கேள்விகளும் இருக்கும். தியரி துறை பால் எனக்கு மிகுந்த ஆர்வத்தை உண்டாக்கிய நூல். என் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய ஒரு ஆசானாகவே இந்நூலைக் கருதுகிறேன்.
ஐஐடி,  சென்னை
ஐஐடி, சென்னை
கல்லூரி படிப்பு முடிந்தபின் முதுகலை படிப்புக்காக போய்ச் சேர்ந்த இடம் சென்னை ஐஐடி. அங்கே அறிமுகமானவர் பேராசிரியர் கமலா கீர்த்திவாசன். முதல் செமஸ்டரிலேயே அவரிடம் பாடம் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் தியரி துறையில் ஆழ்ந்த புலமை பெற்று, பல ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதியவர். பழகுவதற்கு இனிமையானவர். ஆர்ப்பாட்டம் ஏதுமற்று, பூரண அமைதி கொண்டவர். அவரது மேற்பார்வையில் ஆராய்ச்சி கட்டுரைகள் படித்தல், சொந்தமாக புதிய பொருள்களை ஆராய்தல் என அடுத்த கட்ட நகர்வு நிகழ்ந்தது. விவாதங்கள் செய்ய அவரது அறை எப்போதும் திறந்திருக்கும். விடுதியில் இருந்து ஒரு போன் கால் போட்டு விசாரித்து விட்டு நேரே அவரது அறைக்கு சென்று விடலாம். ஓரிரு முறை, வார இறுதி நாட்களில் திங்கட்கிழமை வரை காத்திருக்க பொறுமை இன்றி, அவரது வீட்டில் விவாதித்து இருக்கிறோம். அவரது மேற்பார்வையில் எனது முதல் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினேன். இத்துறையில் எனது ஆர்வத்தை முழுமையாக்கி, “இனி நமக்குத் தொழில் தியரி” என முடிவு செய்ய வைத்தவர்.
மற்றொரு வகையிலும் அந்த ஐஐடி வாழ்க்கை மறக்க முடியாததாய் அமைந்தது. சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த ரம்மியமான சூழலில் விடுதி அறை. மத்திய அரசு புண்ணியத்தில் கிடைத்த கல்வி உதவித் தொகையில் கையில் புரண்ட காசு. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த, பல தரப்பட்ட நண்பர்கள். கணிணியில் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விவாதிக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. இந்த இனிய சூழலில் கணிணியியலுக்கு வெளியேயும் ஆர்வம் பிறந்து, இன்று வரை தொடர்கிறது. கணிதம், மானுடவியல், தாவரவியல், சங்க இலக்கியம், நாலாயிரம் என கண்டதையும் கலந்து கட்டி படித்த காலம். இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகமாளும் அச்சுவை பெறினும் வேண்டேன் என்றொரு வாழ்வு. அதன் பிறகு, அவ்வளவு சந்தோஷமான காலம் அமையவில்லை. இப்படிப்பட்ட சூழல் எனது அறிவுப்புல ரீதியில் வளர பெரிதும் உதவியது.
இங்கே ஒரு விஷயம் சுள்ளென்று உறைக்கிறது. சமீபத்தில், வினவில் அரசு ஆதிதிராவிட மாணவர் விடுதி பற்றி புகைப்படங்களுடன் சில கட்டுரைகள் வந்திருந்தன. இந்த விடுதிகளுக்கும், மேலே சொன்ன ஐஐடி விடுதியின் தரத்துக்கும், சூழலுக்கும் ஏன் இத்தனை வித்தியாசம்? எங்கே பிழை? சிந்திக்க வேண்டிய விஷயம். கட்டுரை திசை மாறுகிறது என்பதால், இத்துடன் நிறுத்தி மேலே செல்கிறேன்.
அடுத்து முனைவர் பட்டம் படிக்க அமெரிக்காவில் விஸ்கான்சின் (Wisconsin) மாகாண பல்கலைக்கு போய் சேர்ந்தேன். அந்நாட்டின் முன்னணிப் பல்கலைகளுள் ஒன்று. மாடிசன் (Madison) என்னும் நகரில் அமைந்தது. அழகான அமைதியான ஊர். சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஒரு ஆய்வுப்படி அமெரிக்காவில் வாழச் சிறந்த நகரங்களுள் ஒன்று என சொல்லப்பட்டது. கல்லூரியை விட எனக்கு அதிகம் பிடித்தது அங்கிருந்த ஓர் ஏரி. அருகிலேயே, கல்லூரியின் பல நூலகங்களில் ஒன்று. பிரம்மாண்டமானது. உலக இலக்கியம் எல்லாம் கிடைக்கும். தமிழ் கூட. தொல்காப்பியம் தொடங்கி, தமிழன்பன் வரை. நவீன தமிழ் கவிதைகள் இங்கு தான் படிக்க தொடங்கினேன். சில்லென்ற ஏரிக்காற்று! கூடவே தமிழ்! இனிமை! இனிமை! (அண்ணா நூலகத்தை விட இது அளவில் பெரியது என்பது என் கணிப்பு என சொல்லி சைக்கிள் கேப்பில் கலைஞரை சீண்டிக் கொள்கிறேன் :-)
மின்னணுவியல்
மின்னணுவியல்
அங்கிருந்த கணிணியியல் துறை பேராசிரியர்கள் கல்விப்புல ரீதியாக முக்கிய ஆய்வுகள் செய்து, தத்தம் துறைகளில் உலக அளவில் அறியப்படும் ஆளுமைகள். இவர்களிடம் பாடம் படித்தது என் அதிர்ஷ்டம். எனது ஆய்வுப் படிப்பில் நேரடித் தொடர்பு கொண்ட மூன்று பேராசிரியர்கள் பற்றி சொல்லி விட்டு, கதையை முடிப்போம்.
முதலாமவர் பேராசிரியர் ஆன் கான்டன் (Anne Condon). முதல் பத்தியில் சொன்ன வினவு பாணி கட்டுரை எழுதினால் அவசியம் குறிப்பிட வேண்டியவர். கல்விப்புல ஆளுமை என்பதை தாண்டி, தமது மாணவர்கள் மீது அதிக அக்கறை காட்டுபவர். பழகுவதற்கு இனிமையான, மென்மையானவர். கையைப் பிடித்து என்னை கல்விப்புலத்தின் அடுத்த தளத்துக்கு அழைத்து சென்றவர். எனக்கு தியரி துறையின் உட்பிரிவான computational complexity theory என்பதை அறிமுகப் படுத்தி பால பாடம் சொல்லித்தந்தவர். கணிணியல் என்பதில் இருந்து விலகி, மேலும் இருகிப் போய், கணிதவியளுக்குள் நுழைந்து விடும் துறை இது. முனைவர் பட்டத்துக்கான எனது ஆய்வுகள் இத்துறையில் அமைந்தன. இவரது மேற்பார்வையில் ஒரு வருடம் படித்து வந்தேன். துரதிர்ஷ்டவசமாக, இவர் வேறொரு பல்கலைக்கு மாற்றலாகிப் போனதில் மேய்ப்பரற்ற ஆடாக சில காலம் சுற்ற வேண்டி வந்தது.
இரண்டாமவர் பேராசிரியர் டீட்டர் வான் மெல்கபீக் (Dieter van Melkebeek). வயதில் இளையவர் என்பதால், ஒரு நண்பரோடு பழகுவது போன்ற உணர்வு இருந்ததுண்டு. அங்கு படித்த காலம் முழுதும், எனக்கு பல வகையிலும் ஆதரவும், ஊக்கமும் அளித்தவர். சர்வாகம பண்டிதர் என சொல்லத்தக்க வகையில், மேலே சொன்ன உட்துறையில் ஆழ அகலம் முழுதும் அறிந்தவர். எனக்கு நேரடி பழக்கம் உள்ளவர்களுள் இத்துறையில் மிகப் பரந்த ஞானம் கொண்டவர் இவர் என்பேன். எந்த சிறு செயலிலும் அதில் இவர் காட்டும் சிரத்தை அதிசயிக்கத் தக்கது. மிகக் கடினமான பாடங்களைக் கூட ஒரு சிறு பிறழலும் இன்றி இவர் சொல்லித் தருவது மலைக்க வைக்கும்.
மூன்றாமவர் பேராசிரியர் ஜின்-யி சாய் (Jin-Yi Cai). எனது முனைவர் பட்ட ஆய்வு மேற்பார்வையாளர். கணிதவியல் பாடங்கள் இரண்டு விதங்களில் சொல்லித்தர முடியும். முதலாவது, சுஜாதா வார்த்தையில் சொல்வதானால், ஆஸ்பத்திரி சுத்தத்தோடு, கணிதத்துக்கே உரிய கறார்தனத்தோடு பேசுவது. இவரது பாணி இரண்டாவது வகையிலானது. கறார் தனத்தை சற்று குறைத்துக் கொண்டு, பாடத்தின் உட்கருவை (intuition) உயிருடன் கொண்டு வந்து கண்முன் நிறுத்தும் முறை. ஒரு முறை பயின்றால் ஜென்மத்துக்கும் மறக்காது. நான் பாடம் பயின்றவர்களுள் இந்த இரண்டாவது பாணி ஆசிரியர்களில் இவரையே முதன்மையானவராக கருதுகிறேன். இத்தனைக்கும் இவர் சொல்லித் தந்தவை மிகச் சிக்கலான பாடங்கள். பாட விஷயங்கள் முற்றுணர்ந்து உடம்பில் ஊறிப் போனால் தான் இப்படி செய்ய முடியும். இத்துறையில் பயின்ற பாடங்களில் மனதில் பதிந்து போனவை பெரும்பாலும் இவர் சொல்லித் தந்தவை என சொல்லி குரு வணக்கம்!
பிஸ்கட்
“பிரித்தால் தான் பிஸ்கட் தின்ன முடியும்”
எந்த விஷயத்திலும் உட்கருவை உய்த்துணர வேண்டும் என்பதில் அசாத்திய உறுதி கொண்டவர். ஒரு நிகழ்வு பற்றி குறிப்பிட விருப்பம். ஆரம்ப காலத்தில், ஒரு ஆய்வுக் கட்டுரையை படித்து வந்து விளக்க சொல்லி இருந்தார். நான் மேம்போக்காக படித்து விட்டு செல்ல, அவர் அடுத்த கட்ட கேள்விகள் கேட்கத் தொடங்கினார். “அதெல்லாம் தெரியாது சார்” என சொல்ல அவருக்கு மிகுந்த கோபம் வந்து விட்டது. மேஜை மேல் இருந்த பிரிக்கப்படாத பிஸ்கட் பாக்கட்டை எடுத்தவர், “இப்படியே பிரிக்காமல் அழகு பார்த்தால் பிஸ்கட் தின்ன முடியுமா” என்றார். “முடியாது சார்”. “பின்பு என்ன செய்ய வேண்டும்?”. “பிரிக்க வேண்டும் சார்”. “ஆமாம், பிரித்தால் தான் பிஸ்கட் தின்ன முடியும்” என்றவர் ஆக்ரோஷமாக பாக்கட்டை பிரிக்க அறை எங்கும் பிஸ்கட் சிதறியது! அதிர்ச்சி அடைந்தாலும், எனது ஆய்வுத்துறை தொடர்பாகவாவது, மேம்போக்காக படித்தல் என்பது விலகிய தருணம்! மறக்க முடியாதது!
இதைப் படி, அதை பற்றி யோசி என அறிவுரை சொல்லிவிட்டு சும்மா இருந்துவிட மாட்டார். தானும், ஏர்பிடித்து சேற்றில் இறங்கும் ஜாதி! ஒரு முறை, நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த ஒரு கணிதவியல் புதிரை நாம் தீர்க்க முயல்வோம் என சொல்லி குண்டு தூக்கி போட்டார்! அது தொடர்பாக படித்து சிந்தித்து, ஒரு ஆறு மாதம் போன பின், புதிருக்கு விடை கிடைத்து விட்டதாக ஒரு பிரமை! இரண்டு நாட்கள் முழுதும், வேறு வேலை வெட்டி ஏதுமின்றி, விடை சரிதானா என விவாதித்துக் கொண்டிருந்தோம். முடிவில், “ஆம்! தீர்ந்தது இது” என முடிவு செய்து விட்டோம். அடுத்த பத்து தினங்கள் வானத்தில் மிதந்து கொண்டிருந்தேன். அவர் ஏதும் பேசவில்லை. பிறகு, ஒரு நாள் இரவு இரண்டு மணிக்கு தொலைபேசி அழைப்பு! “உமது தீர்வில் குற்றம் இருக்கிறது” என நக்கீரர் போல சொல்லி பலூனில் ஊசி குத்தி விட்டார்! நான் சும்மா இருந்த பத்து நாளும், மனிதர் சிந்தித்து கொண்டு இருந்திருக்கிறார்! பிறகு, குற்றத்தை பற்றியும், இடிந்து வீழ்ந்த மணல் மாளிகையில், கல்லு, மண்ணு, ஜல்லி என ஏதாவது ஒப்பேத்த முடியுமா என்பது பற்றியும் இரண்டு நாள் விவாதித்துக் கொண்டிருந்தார்! முடிவில், தேத்த முடிந்ததை பொறுக்கி எடுத்து கட்டமைத்ததில் எனது ஆய்வு ஏட்டின் (thesis) முக்கிய அத்தியாயம் கிடைத்தது!
ஒரு சாதாரண மாணவனாக இருந்த எனக்கு கணிதம், கணினியியல் துறைகளில் உள்ளார்ந்த ஆர்வம் ஏற்படுத்தி என்னை உயர்த்திய இந்த ஆசான்களுக்கு ‘ஆசார்ய தேவோ பவ’ என சொல்லி குரு வந்தனங்கள். நான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுமாறு, இவர்கள் போலவே நல்லதோர் கல்லூரி ஆசிரியராகி கல்விப்பணி செய்ய வேண்டும் என்ற ஆசை துளிர்த்துள்ளது. மேலும், இன்றளவும் மேற்சொன்ன துறைகளில் ஆய்வு என்ற பெயரால் ஏதோ ஒரு மூலையில் எலி பிடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த செயலை ஒரு கல்வி நிறுவன சூழலில் இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என்ற எண்ணமும் தோன்றுகிறது. இப்போது தொங்கிக் கொண்டிருக்கும் கிளையை விட்டு விட்டு மேலே சொன்ன கிளைக்கு தாவுவது சில பல காரணங்களால் தடை பெற்றுள்ளது. முக்கியக் காரணம் காந்தியடிகள். வாய் நிறைய ஜோரா புன்னகையை ஏந்திச் சிரிப்பாரே அவரேதான்! இப்போதிருக்கும் கிளையில் அதிகம் சிரிப்பவர், கிளை தாவினால் குறைவாக சிரிப்பார் என்றொரு தயக்கம்! தயக்கங்களும், தடைகளும் விரைவில் விலக திருமால் அருள் புரியட்டும்!
- வெங்கடேசன்