அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

துப்பாக்கி மிரட்டல்... விவாதங்கள்

'துப்பாக்கி’ திரைப்படத்தில் முஸ்லிம் விரோதக் கருத்துக்கள் இடம்பெற்று இருப்பதாகப் போர்க்கொடி தூக்கிய முஸ்லிம் கூட்டமைப்பினரை ஓட்டலில் சந்தித்தது படக்குழு. தாணு, முருகதாஸ், சந்திரசேகரன் ஆகியோருடன் 24 முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற அந்தக்கூட்டம், ஏகத்துக்கு சூட்டைக் கிளப்பியது. உள்ளே நடந்த விஷயங்களை பலரிடம் பேசி விசாரித்தபோது கிடைத்த தகவல் இது.

த.மு.மு.க. செயலாளர் சமது முதலில் பேசினார். ''திராவிட இயக்கச் சிந்தனை கொண்டவர் தாணு. அதனால், அவர் முஸ்லிம்களுக்கு எதிராக படம் எடுத்திருப்பார் என நாங்கள் நினைக்கவில்லை. சந்திரசேகரனும் முஸ்லிம் விரோதப்போக்கோடு நடந்து​கொண்டார் என்று சொல்ல எந்த சம்பவமும் இதுவரை இல்லை. படத்தின் இயக்குனரான நீங்கள்​தான் இவ்வளவு பிரச்னைக்கும் காரணகர்த்தா'' என்று எடுத்த எடுப்பிலேயே ஏ.ஆர்.முருகதாஸைப் பார்த்து சீறினார்.
''படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் சங்பரிவார் அமைப்புகளின் சித்தாத்தங்கள் வெளிப்பட்டு இருக்கின்றன. மும்பைத் தீவிரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்கரே பற்றி படத்தில் உயர்வாக வசனம் வைத்திருக்கிறீர்கள். மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்த பெண் சாமியார் பிரக்யா சிங், ராணுவத்தில் கர்னலாக இருந்த ஸ்ரீகாந்த் புரோகித் இருவரையும் ஹேமந்த் கர்கரேதான் கைதுசெய்தார். ஆனால் அதற்கு நேர்மாறாக, ராணுவத்தைச் சேர்ந்த முஸ்லிம் கேரக்டர் தீவிரவாதிகளுக்கு உடந்தையாக இருப்பதாக படத்தில் காட்டி இருக்கிறீர்கள். அஜ்மீர் தர்கா, சம்ஜ்வதா எக்ஸ்பிரஸ், ஹைதராபாத் மக்கா மசூதி ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் காவி பயங்கரவாதம் இருந்ததையும், சங்பரிவார் ஆட்கள் கைதுசெய்யப்பட்டதையும் லாகவமாக மறைத்து விட்டு, படத்தை எடுத்து இருக்கிறீர்கள்'' என்று சமது சொல்ல...
இடைமறித்த முருகதாஸ், ''என் மகன், மகள், மனைவி மீது சத்தியமாகச் சொல்கிறேன். அந்த மாதிரியான எண்ணம் துளிகூட என் மனதில் இருந்தது இல்லை. நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டை எல்லாம் கேட்கும்போது இங்கேயே செத்துவிடத் தோன்றுகிறது'' என்று கடுமையாக மறுத்து இருக்கிறார்.  
தொடர்ந்து பேசிய சமது, ''எங்களை மட்டும் அல்ல... எந்த சமூகத்தையும் இழிவு​படுத்தி படம் எடுக்க வேண்டாம். தலித் சமூகத்தைவிட மிகவும் மோசமான நிலையில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்று சச்சார் கமிட்டி அறிக்கையில் சொல்லி இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு வாடகை வீடுகூட கிடைக்காத நிலையில் இருக்​கிறோம். படத்தில் எங்களை தீவிரவாதிகளாகக் காட்டினால், சமூகத்தில் எப்படி எங்களுக்கு மரியாதை கிடைக்கும். படத்தின் திரைக்கதையை ரொம்ப நுணுக்கமாக எடுத்து இருக்கிறீர்கள். இது சங்பரிவாரின் டெக்னிக். படத்தின் முழு மூளை நீங்கள்தான். உங்களை மன்னிக்கவே முடியாது'' என்றார்.
இதற்குப் பதில் அளித்த முருகதாஸ் ''கள்ளக்​குறிச்சியில் கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்தவன் நான். எங்கள் வீட்டைச் சுற்றி முஸ்லிம்கள்தான் வாழ்கிறார்கள். அவர்களோடு தொப்புள்கொடி உறவாகத்தான் இதுவரை நான் பழகி இருக்கிறேன். அவர்களை இழிவுபடுத்தி படம் எடுக்க, கனவில்கூட நினைத்தது இல்லை. வெப்சைட்டுகளைப் பார்த்துதான் படத்தின் திரைக்கதையை எழுதினேன். இது திட்டமிட்டு நடத்தப்படவில்லை. இதற்காக நான் உங்களிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
அடுத்துப்பேசிய இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் செயலாளரான முனீர், ''நீங்கள் தமிழ்நாட்டில் இருந்த வரை எந்தப் பிரச்னையும் இருந்தது இல்லை. மும்பைக்குப் போய் படம் எடுக்க ஆரம்பித்த பிறகுதான் உங்களிடம் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அங்கே இருக்கும் சங்பரிவார் அமைப்புகள் உங்களைப் பயன்படுத்திக் கொண்டார்களா என்ற அச்சம் படத்தை பார்க்கும்போது ஏற்படுகிறது. நடிகர் விஜய் மீது இருந்த மரியாதை இந்த படத்தின் மூலம் போய்விட்டது'' என்று சொன்னபோது, ''அப்படி நினைக்காதீர்கள். இந்தப் படத்தில் என் மகன் நடித்ததற்காக நான் வருந்துகிறேன். உங்கள் சமூகத்துக்கு ஏற்பட்ட காயத்துக்காக நானும் என் மகனும் வருத்தப்படுகிறோம். அடுத்த படத்தில் விஜய் உயர்வான முஸ்லிம் கேரக்டரில் நடிப்பான்...'' என்றார் சந்திரசேகரன்.
இறுதியில், ஆட்சேபகரமான காட்சிகள் நீக்கப்​படுவதோடு வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதிக் கொடுப்பதாக படக் குழு சொன்னதால், பிரச்னை சுமுகமாகத் தீர்க்கப்பட்டது. அடுத்த இரண்டு நாட்களில் சர்ச்சைக்குரிய சில காட்சிகளை நீக்கிவிட்டு, அதுகுறித்த விவரங்களை மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் தமிமுன் அன்சாரியிடம் அளித்தார் தாணு. நீக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய படத்தை முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு ஸ்பெஷலாக போட்டுக் காட்டினர். அதிலும் சில காட்சிகள் நீக்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி, அதையும் நீக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர். அதையும் நீக்குவதாக தாணு ஒப்புக்கொள்ளவே... பிரச்னை ஓய்ந்தது!
- எம்.பரக்கத் அலி

Thanks J.V

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக