அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

சுதந்திரத்திற்காக காக்கிச்சட்டையை கழற்றி எறிந்த தியாகி கம்பம் பீர்முஹமது பாவலர்

kambam_peer_mohammad_602

தேனி மாவட்டம், 1888 ஆம் ஆண்டு மியாகானுக்கு புதல்வராகப் பிறந்தவர் பீர்முஹமது பாவலர். சிறந்த கால்பந்தாட்ட வீரர். ஆண்டிபட்டியில் காவல்துறை சார்-ஆய்வாளராக பணிபுரிந்து, ஆங்கிலேய அதிகாரிகள் பொய்வழக்கு போட்டு சித்திரவதை செய்யக் கூறியதால் தன்னுடைய பதவியைத் துறந்தவர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை குற்றப்பரம்பரை எனக்கூறி அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து சித்திரவதை செய்வதை ஆங்கிலேயர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொய் வழக்கு போடுவதையும் தவிர்த்து வந்தார்.
 மதுரையில் முதன் முதலில் சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் இருந்தபோது மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள நகைகள் களவு போனது. இதனை உடனடியாக கண்டுபிடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டுப்பெற்றார். அதன் பின்னர் குற்றம்பரம்பரையினர் தினமும் காவல்துறையில் கையெழுத்துப் போடுவது முறையல்ல எனக்கூறி கோட்டாட்சியரிடம் கொள்கை மாறுபாடு கொண்டு தகராறு செய்தார். இதனால் உயர்அதிகாரிகளுக்கும் இவருக்கும் தகராறு ஏற்படவே காக்கிச்சட்டைக்கு பிரியாவிடை கொடுத்து சுதந்திரத்திற்காக போராடினார். இயற்கையிலேயே பாடல் இயற்றும் குணம் கொண்டவர்.
   கலெக்டரும் கடவுளல்ல
   அடிமைப்போலீஸ்
   கான்ஸ்டபிள் எமனுமல்ல
   அல்லா...யா அல்லா
   இத்தொல்லைகள்
   அகலுவது எந்நாளோ?
   இப்பொல்லாத பேய்களளெல்லாம்
   இங்கிலாந்து
   போவதும் எந்நாளோ?
என்று தேசவிடுதலைக்காக வேதனைப்பட்டு பாடல்களை பாடியவர்.
 1923 ஆம் ஆண்டு அந்நிய நாட்டு துணிகளை எதிர்ப்பதற்காக கம்பத்தில் உள்ள ஜவுளி வியாபாரிகளை ஒருங்கிணைத்து அனைவரிடமும் சத்தியம் வாங்கும் வரை சத்தியாகிரகம் போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர். அதன் பின்னர் சத்தியாகிரகப் போராட்டத்தில் கைதாகி அலிப்பூர் சிறையில் வாடி வதங்கினார். இவரது 13 கையெழுத்துப் பிரதிகளை தேசத்துரோக புத்தகங்கள் என்று அறிவித்து ஆங்கிலேய அரசு அப்புத்தகங்களை தீயிட்டு கொளுத்தியது. மேலும் திண்டுக்கல், மதுரை, திருச்சி ஆகிய நகரங்களுக்குள் பிரச்சாரம் செய்யக்கூடாது என தடை விதிக்கப்பட்டார்.
சுதந்திரம் எனது தாகம் என்ற தாரக மந்திர அடிப்படையில் மாறுவேடத்தில் தஞ்சையை ஆண்ட சரபோஜி உடையில் நுழைந்து பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டார். அன்றைய காலகட்டத்தில் வெளிவந்த பாமஞ்சரி, காந்தி மாலிகை, முத்தண்ணா போன்ற இவரது நூல்களிலும் சுதந்திரத்தைப் பற்றி எழுதி எழுச்சியூட்டினார். பாமஞ்சரி நூலினைப் படித்துப் பார்த்த உடுமலை முத்துச்சாமி கவிராயர் "இது பாமஞ்சரி அல்ல. நாமஞ்சரி" என்று புகழ்ந்து பாடினார். 1941 ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு 6 மாதம் சிறைத்தண்டனை பெற்றார்.
ஆங்கிலேயரை எதிர்த்து போராட்டம் நடத்திய மாப்பிள்ள முஸ்லீம்கள் திரூரிலிருந்து கோயமுத்தூருக்கு கூட்ஸ் ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது பிணமாக இருந்தவர்களை திருச்சியில் புதைத்தனர். புதைத்த இடத்தில் கல்லூரி ஒன்றைக் கட்டினால் சிறப்பாக இருக்கும் என்று இவர் கூறியதையடுத்து அங்கு கல்லூரி கட்டப்பட்டது. இவரின் பெயரை இணைத்து திருச்சி ஜமால் முகமது கல்லூரி துவங்கப்பட்டது. 1942 ஆம் ஆண்டு "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். இவரது நினைவாக கம்பம் மெட்டு செல்கின்ற வழியில் சிதிலமடைந்த நிலையில் பாவலர் நூலகம் ஒன்று காலத்தின் எச்சமாய் உள்ளது.
- வைகை அனிஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக