அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

குண்டுவெடிப்புகளும் முன்முடிவுகளும்!

குண்டுவெடிப்புகளும் முன்முடிவுகளும்!பாட்னா குண்டு வெடிப்பு தொடர்பான முடிச்சுகள் அவிழத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. இந்த குண்டு வெடிப்புகள் தொடர்பாக இந்து இளைஞர்களும் (முஸ்லிம் பெயர் இருந்தால்தான் அவன் தீவிரவாதி; இல்லையெனில் இளைஞன்) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குண்டு வெடிப்பு நடந்த உடன், இந்தியன் முஜாஹிதீன் அமைப்புதான் இந்தக் குண்டு வெடிப்பை நடத்தியது என ஊடகங்கள் தங்கள் கற்பனை புலனாய்வுத் தகவல்களை ஒட்டி கதை கட்டியதை நம்பி, அறிவுஜீவிகளாகத் தங்களை எண்ணிக் கொண்டிருப்பவர்களும் எழுத்தாளர்களாக அறியப்படுபவர்களும் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் விமர்சனங்களைப் பதிந்தனர்.

இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பே போலியானது என முஸ்லிம்கள் கூறியபோது, ஏளனமாகச் சிரித்த இவர்கள், பயங்கரவாத அமைப்பைச் சொன்னால் இவர்களுக்கு ஏன் கோபம் வருகிறது என்று எஞ்சியுள்ள முஸ்லிம்களையும் குற்றவாளிகளாகச் சித்திரிக்க முயன்றனர்.

"இந்தியாவில் எப்போதெல்லாம் ஆட்சியாளர்களுக்கும் பெரிய அரசியல் கட்சிகளுக்கும் சோதனைகள் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் குண்டுகள் வெடித்துள்ளதையும் குண்டு வெடிப்புகள் தொடர்பாகத் தொடக்கத்தில் முஸ்லிம்களைக் கைது செய்து, நீண்ட விசாரணைகளுக்குப் பின் அந்தக் குண்டு வெடிப்புகள் சங் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது" என்ற உண்மையை எடுத்துச் சொல்பவர்களும் கூட பயங்கரவாதிகளுக்கு உதவுபவர்களாகவே கட்டமைக்கப்படுகிறார்கள்.

பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, ஆளுமை மிக்கவராக போலியாக கட்டமைக்கப்படும் மோடியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது, சிறிய அளவில் குண்டுகளை வெடிக்கச் செய்ய சங் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக, மோடியின் தலைமையிலான குஜராத் அரசின் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்த செய்தியையும் பகிர்ந்து, குண்டுவெடிப்பை இவர்களே கூட செய்திருக்கக் கூடும் என்று பத்திரிகையாளர் ஞாநி கூறியதை, "மிகவும் கஷ்டப்பட்டு இந்தத் தியரியை அவர் உருவாக்கியுள்ளார்" என்று ஏளனம் செய்தனர்.

தற்போது முஸ்லிம்கள் அல்லாது இந்துக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைதுகள் இறுதியானவை என்று நான் நினைக்கவில்லை. இந்தக் குண்டு வெடிப்பை முஸ்லிம்களே கூட நடத்தியிருக்கக் கூடும். தற்போது விசாரணை நடந்து கொண்டுள்ள ஒரு வழக்கில் விசாரணையில் சிறிதும் தொடர்பில்லாத நான் கருத்து கூற இயலாது.

குண்டுவெடிப்புகளும் முன்முடிவுகளும்!குண்டுகள் வெடித்த உடன் அது இன்னாரால்தான் நடத்தப்பட்டது என்று முடிவை அறிவிக்க ஒன்று அந்தக் குண்டு வெடிப்பை நான் நடத்தியிருக்க வேண்டும்; அல்லது குண்டு வெடிப்பு நடத்திய அமைப்புடன் எனக்கு தொடர்பு இருக்க வேண்டும்; அல்லது குண்டு வெடிப்பை நடத்திய முகாமுக்கு எதிர் முகாமினருடன் எனக்கு தொடர்பு இருக்க வேண்டும். பயங்கரவாத முகாம்கள் எவற்றிலும் தொடர்பில்லாத நான் எப்படி இந்தக் குண்டு வெடிப்பை இன்னார்தான் நடத்தியது என உறுதியாகக் கூறமுடியும்?

நாட்டில் நடக்கும் குற்றச் செயல்களை விசாரணை செய்வதற்காக திறமை வாய்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் விசாரணை முடிவை அறிவிக்கும் வரை பார்வையாளனாக மட்டுமே இருந்துவிட்டு, அவர்களின் விசாரணை முடிவில் சந்தேகம் இருந்தால் அதை வெளிப்படுத்தி, அதைக் கேள்விக்குள்ளாக்குவதுதானே நாகரீகமான மனிதர்களின் உண்மையான ஜனநாயகப் பண்பாக இருக்க முடியும்?

எளிய மனிதர்களின் துயரங்கள் தம்மை எந்த அளவு பாதித்துள்ளது என்று நாள்தோறும் ஒவ்வொரு நிகழ்வையும் குறிப்பிட்டு எழுதும் எழுத்தாளர்களிடமிருந்தும் பத்திரிகையாளர்களிடமிருந்தும் இந்தக் குறைந்தபட்ச நாகரீகத்தைக்கூட எதிர்பார்ப்பது தவறோ?

- அப்துல் கரீம்
நன்றி: இந்நேரம்.காம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக