அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

தோப்புதுறையின் அரசியல் “ஞானி” செ.யூசுப்!


 
வேதாரண்யம் தொகுதியின் மூத்த அரசியல் தலைவரும், திமுகவின் பொதுக்குழு உறுப்பினருமான செ.யூசுப் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்கள் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தமடைந்தேன்.


50 ஆண்டுகாலமாக திமுகவின் தீவிர தொண்டராகவும், முழுநேர அரசியல்வாதியாகவும் திகழ்ந்த செ.யூசுப் அவர்கள் சமுதாய உணர்வாளர் என்பதில் ஐயமில்லை.

தோப்புத்துறை ஜமாஅத் மன்றத்தின் பல்வேறு பொறுப்புகளில் செயலாற்றியவர்.

வேதாரண்யம் தொகுதியின் மிகச்சிறந்த பேச்சாளர்களில் ஒருவராக வலம்வந்தவர்; அரசியல் தட்பவெப்பங்களை அறிந்து செயல்படும் நுட்பம் கொண்டவர்.

வேதை பெரியார்என்று அழைக்கப்படும் மா.மீனட்சிசுந்தரம் அவர்களின் உற்ற நண்பராகவும், அரசியல் ஆலோசகராகவும் செல்பட்டவர். அவரும், அவரது பால்ய நண்பருமான சி.சாகுல் ஹமீது அவர்களும் மதிமுகவில் இணைந்தபோது, வேதை தொகுதியில் திமுகவை தூக்கி நிறுத்தியவர்.
1996-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா எதிர்ப்பலை  வீசியபோது, திமுக சார்பில் இவருக்கு வேதாரண்யம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு இருந்தது. வன்னியர்களும், தேவர்களும் நிறைந்த தொகுதியில் நமக்கு வாக்களிப்பார்களா? என்ற அச்சத்தில், கட்சியின் வெற்றியைக் கருதி எஸ்.கே.வேதரத்தினம் அவர்களை வேட்பாளராக தலைமைக்குப் பரிந்துரைத்தார்.

உண்மையில் அப்போது வீசிய ஜெயலலிதா எதிர்ப்பலையில், வேதையில் யார் திமுக சார்பில் களமிறங்கியிருந்தாலும் அவர் வெற்றிபெறும் சூழல் இருந்தது. இவரை பலரும் வற்புறுத்தினார்கள். அவர் தன் முடிவில் உறுதியாக இருந்தார்.

எஸ்.கே.வி அவர்களின் வெற்றிக்கு பாடுபட்டு, அவரை ஒரு பெறும் அரசியல் சக்தியாக தூக்கி நிறுத்தியதில் செ.யூசுப் அவர்களின் பங்கு அளப்பறியது.

அதிகபட்சமாக ஒன்றிய கவுன்சிலர் என்ற அதிகாரப் பதவியை மட்டுமே அவர் பெற்றார். கடந்த திமுக ஆட்சியில் சட்டமன்ற மேலவை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போது இவருக்கு எம்.எல்.சி பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலவை அமையப் பெறாதததால் அந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இவரைத் தெரியாத அரசியல்வாதிகள் இருக்க முடியாது. கலைஞரின் கவனத்திலும், மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திலும் இடம்பெற்றவர். அதனால்தான் அவரது மகனின் திருமணத்தில் மு.க.ஸ்டாலின், தோப்புத்துறைக்கு வருகை தந்து பங்கேற்று சிறப்பித்தார். அந்த மேடையில்கூட தனது மருமகளை புர்கா அணிந்த நிலையில்தான் மேடை ஏற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்திரிக்கைகளை வாசிப்பதிலும், அன்றாட அரசியல் நிலவரங்களை அறிந்துகொள்வதிலும் ஆர்வங்காட்டிய செ.யூசுப் அவர்கள், பொது மேடைகளிலும் நன்றாகப் பேசுவார்.

நான் தோப்புத்துறையில் விஷிதி, தமுமுக, மமக என பல்வேறு களங்களில் பணியாற்றிய போது கூர்ந்து கவனித்து விவரங்களை அறிந்துகொள்வார். ஏதாவது ஒருவிஷயத்தில் முடிவு எடுத்துவிட்டால் அதில் உறுதியாக நிற்பார்.

2003-ல் எனது திருமணம் பல சவால்களுடன் நடைபெற்ற நிலையில், மா.மீ அவர்களுடன் மேடையேறி வாழ்த்திப் பேசினார். எனது நன்றியுரையில் அவரை தோப்புத்துறையின் அரசியல் ஞானிஎன குறிப்பிட்டேன். காரணம் தேர்தல் களங்களில் எங்கு? யாரை? எப்படிக் கையாள்வது? என்பதில் கெட்டிக்காரராக செயல்பட்டார்.

வேதாரண்யம் தொகுதி வட்டாரத்தில் வாழும் பல்வேறு சமூக மக்களும் அவரோடு நெருங்கிப் பழகினர். அவர் பன்முக சமூகத்தில் சிறப்பாக இயங்கினார்.

சில மாதங்களுக்கு முன்பு நானும் மமக சகோதரர்களும் அவரது வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்தோம். கேன்சர்நோயால் பாதிக்கப்பட்டு, சற்று தளர்ந்து போயிருந்தார். அதன்பின் சந்திக்கவேண்டும் என நினைத்ததுண்டு. ஆனால் வேலைப்பளு காரணமாக சந்திக்க முடியமலேயே போயிற்று.
இன்று அவர் இறைவனிடம் சேர்ந்துவிட்டார். திமுக ஒரு நல்ல செயல்வீரரை இழந்திருக்கிறது. தோப்புத்துறை பன்முகம் கொண்ட அரசியல் பிரமுகரை இழந்திருக்கிறது. வேதாரண்யம் தொகுதி ஒரு அரசியம் தலைவரை இழந்திருக்கிறது. திரு. மா. மீனாட்சி சுந்தரம், ஜனாப் சி.சாகுல் ஹமீது போன்றோர் தங்களது உற்ற நண்பரை இழந்திருக்கிறார்கள்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும், நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது ஜனாஸா தொழுகையில் பங்கேற்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் 5.11.13 ன்று காலை நடைபெறுவதால் என்னால் தோப்புதுறைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

அன்னாரின் மறுவாழ்விற்காக வல்ல ரஹ்மானிடம் பிரார்த்திக்கிறேன். 

எம். தமிமுன் அன்சாரி
பொதுச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி
(நிறுவனர், முஸ்லீம் மாணவர் முன்னணி, தோப்புத்துறை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக