அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

‘சர்ப்ரைஸ்’கான்-இந்திய கிரிக்கெட் அணிக்குக் கிடைத்திருக்கிறார் இன்னொரு இளம் நம்பிக்கை நட்சத்திரம்

ஷார்ஜாவில் 19 வயதுக்குட்பட்டோருக்கான U-19 இளைஞர் உலகக் கோப்பை போட்டிகள் மும்முரமாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்த முறையும் இந்தியாதான் கோப்பையை வெல்லும் என்று உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
http://static.sportskeeda.com/wp-content/uploads/2014/02/sarfaraz-khan-2114207.jpg

ஆடிய முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று ஒரு ஜாம்பாவானாக இந்திய அணி காலிறுதிக்கு நுழைகிறது. ஒவ்வொரு முறை U-19 போட்டிகள் நடக்கும்போதும் இந்திய அணிக்கு ஓர் இளம் நட்சத்திரம் பரிசாகக் கிடைப்பார். அப்படிக் கிடைத்தவர்களில் ஒருவர்தான் இப்போதைய இந்திய அணியின் சூப்பர் ஸ்டாரான விராட் கோலி. அவரைப்போலவே எல்லோர் கவனத்தையும் திருப்பியிருக்கிறார்  16  வயதேயான சர்ஃப்ரஸ் கான் (SARFRAZ KHAN).
Hardened cricketer:Sarfaraz Khan made a record score of 439 in the U-16 inter-school Harris Shield against Indian Education Society in Mumbai last year.— PHOTO: PTI
ஸ்காட்லாந்து அணிக்கெதிரான ஆட்டம், இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சில் வெறும் 88 ரன்களுக்கே ஆல் அவுட் ஆகியது. இந்திய அணி இந்த சொற்ப இலக்கை எளிதாக எட்டி விடும் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்க... நம்முடைய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட் ஆக... இந்திய அணியின் ஸ்கோர் வெறும் 22 ஆக இருந்தபோதே 5 விக்கெட்டுகளை இழந்து நின்றது. அநேகமாக உலக அரங்கில் வேறெந்த அணியாக இருந்தாலும் இந்தப் போட்டியில் மண்ணைக் கவ்வியிருக்கும். அந்த நேரத்தில்தான் களமிறங்கினான் 16 வயதான சர்ஃப்ரஸ் கான். மிகவும் பொறுப்போடு ஆட்டத்தின் நிலையை உணர்ந்து ஆடி, இந்திய அணியை தோல்வியிலிருந்து மீட்டெடுத்தார்! ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது. அதற்கு முந்தைய பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் 74 ரன்களைக் குவித்து வெற்றிக்கு வித்திட்டதும் சர்ஃப்ரஸ்தான்!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு சர்ஃப்ரஸ் கான் தன்னுடைய டி ஷர்ட்டில் இருந்த எண்ணான 87 என்பதை 97 என்று மாற்றிக்கொண்டார். என்னப்பா! எதுக்கு இந்த எண் மாற்றம் என்று விசாரித்தபோது, ‘97 என்கிற எண்ணை ஒன்பது ஏழு என்று தனித்தனியாக இந்தியில் உச்சரித்தால் நவ்-சாத், அதுதான் என் தந்தையின் பெயர். என்னுடைய எல்லா வெற்றிகளையும் என் தந்தைக்குத்தான் சமர்ப்பிக்க விரும்புகிறேன்’ என்றான்.

அவனுடைய தந்தை நவ்சாத் கான் மட்டும் இல்லையென்றால் இன்றைக்கு சர்ஃப்ரஸால் இந்திய அணிக்காக விளையாடியிருக்க முடியாது.  மேற்கு ரயில்வேயில் சாதாரண வேலை பார்க்கிறவர் மும்பையைச் சேர்ந்த நவ்சாத் கான். ஆனால் அவருக்கு கிரிக்கெட்தான் உயிர். அவரும் ஒரு கிரிக்கெட் பயிற்சியாளர்தான். இந்திய அணிக்காக கிரிக்கெட் ஆட வேண்டும் என்கிற கனவோடு விளையாட ஆரம்பித்த லட்சக்கணக்கானவர்களில் அவரும் ஒருவர். ஆனால் அவரால் இந்திய அணி வரைக்கும் முன்னேற முடியவில்லை. அதனால் அவர் சோர்ந்து விடவில்லை.

தன்னுடைய சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கர் என்ற பகுதியைச் சேர்ந்த திறமையான கிரிக்கெட் வீரர்களை மும்பைக்கு அழைத்து வந்து, அவர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களுக்கான கிரிக்கெட் வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறார்.

2008-இல் இளைஞர் உலகக் கோப்பையை வென்ற இந்திய  அணியில் விளையாடிய இக்பால் அப்துல்லா, நவ்சாத்தின் கண்டுபிடிப்புதான். இவரைப்போல எண்ணற்ற இளம் வீரர்களை உருவாக்கியவர் நவ்சாத் கான். இவ்வளவையும் அவருடைய சொற்பமான வருமானத்தில்தான் செய்கிறார்.

இந்த நேரத்தில்தான் தன் மகனுக்கும் தன்னைப் போலவே கிரிக்கெட் ஆர்வம் இருப்பதை அறிந்ததும் முதல் வேலையாக அவனுக்கான கிரிக்கெட் கோச்சிங் வேலையை தொடங்கிவிட்டார். கடுமையான பயிற்சிகளைக் கொடுக்க ஆரம்பித்தார். இத்தனையும் போதாதென்று தன்னுடைய வீட்டுக்குப் பக்கத்திலேயே தன்னுடைய மகனின் பயிற்சிக்கென செயற்கையாக கிரிக்கெட் பிட்ச் ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார். இதற்காக தன்னுடைய சொத்துகளைக்கூட அடகு வைக்கவும் தயங்கவில்லை நவ்சாத்.

சர்ஃப்ரஸை விட வயதில் மூத்தவர்களோடு கிரிக்கெட் ஆட வைப்பது, அதிகப் பயிற்சி நேரம், சரியான ஊட்டச்சத்துமிக்க உணவு என சர்ஃப்ரஸுக்கு தினமும் கிரிக்கெட்டை ஊட்டி ஊட்டி வளர்க்கிறார். அதோடு இவருடைய பயிற்சிப் பாணியும் மிகவும் கடுமையானது. சர்ஃப்ரஸ் கான் ஒவ்வொரு நாளும் எத்தனை முறை அவுட் ஆகிறாரோ அதே அளவுக்கு காலில் பேட் கட்டிக்கொண்டு மைதானத்தைச் சுற்றிவர வேண்டும்!

‘ஆனால் அதுதான் தன்னுடைய விக்கெட்டின் மதிப்பை சர்ஃப்ரஸுக்கு உணர்த்தும். அதனால்தான் அவனால் நிலைத்து நின்று அதிக ஸ்கோர் அடிக்க முடிகிறது’ என்கிறார் நவ்சாத்.
அதற்கேற்ப சர்ஃப்ரஸ் தொடர்ந்து கிடைக்கிற வாய்ப்பிலெல்லாம் விட்டு விளாசுகிறார். சென்ற மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த U-19 தென்னாப்ரிக்க அணிக்கு எதிராக வெறும் 66 பந்துகளில் 101 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறார். அதற்கு முன் 12 வயதில் பள்ளிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் 439 ரன்கள் குவித்து அசத்தியவர் சர்ஃப்ரஸ்! இப்படி மிகக் குறுகிய காலத்தில் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் சர்ஃப்ரஸ் கான்.

அவருடைய வெற்றிக்குப் பின்னால் எங்கும் நிழலாகத் தொடர்கிறது அவருடைய தந்தை நவ்சாத்தின் அர்ப்பணிப்பு. தன்னுடைய பிள்ளைகளை விளையாட்டில் வெற்றிபெற வைக்க நினைக்கிற எல்லாப் பெற்றோர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை அதுதான்.

‘உங்கள் குழந்தை வெற்றி பெற வேண்டுமா? அதற்காக உழைக்க, அதற்காகப் பாடுபட நீங்கள் தயாரா என்று உங்களையே நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள். அது இன்று கரியாக இருக்கலாம். ஆனால் பட்டை தீட்டப்பட்டால்தான் அது வைரம். அவர்களை பட்டைதீட்டி வைரமாக்க வேண்டிய கடமை பெற்றோர்களுக்கும் உண்டு’ என்கிறார் நவ்சாத் கான்.

‘தொடர்ந்து இந்திய அணிக்கு வெற்றி தேடித் தரும் இந்தக் குட்டிப் பையன் சீக்கிரமே இந்திய அணிக்குள் வந்துவிடுவான்’ என்கிறார் கவாஸ்கர்.

இதே மாதிரி 25 ஆண்டுகளுக்கு முன் ஒரு பையன் கிரிக்கெட் ஆட ஆரம்பித்தான். பள்ளி அளவில் பட்டையைக் கிளப்பியது 12 வயதில். உலக அரங்கில்  அசத்தியது 16 வயதில். அவனும் இதே மும்பையிலிருந்துதான் வந்தான். பின்னாளில் அவன் கிரிக்கெட்டையே ஆண்டான். அவனுடைய பெயர்  சச்சின் தெண்டுல்கர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக