அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

ப்ளஸ் 1ல் எந்த க்ரூப் எடுக்கலாம்?: Group III&IV- நீங்களும் பிரேமா ஆகலாம்!

டாக்டர், இன்ஜினீயர் படிப்பு மட்டும்தானா மதிப்பு மிக்கது? இந்த இரண்டுக்கும் இணையாக பல துறைகள் இருக்கின்றன. அதற்கு அடித்தளமாக இருக்கிறது மூன்றாவது க்ரூப் (Group III).


கணக்குப்பதிவியல், வணிகவியல் மற்றும் பொருளியல் ஆகிய கட்டாயப் பாடங்களையும், வணிக கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல், இங்கிலீஷ் ஃபார் கம்யூனிகேஷன்ஸ், வரலாறு, பொலிட்டிகல் சயின்ஸ், எதிக்ஸ் அண்ட் இந்தியன் கல்ச்சர் மற்றும் அட்வான்ஸ்டு லாங்குவேஜ் (தமிழ்) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை விருப்பப் பாடமாகவும் கொண்டதே இந்தப் பிரிவு.

மூன்றாவது க்ரூப்பை யாரெல்லாம் தேர்ந்தெடுக்கலாம்? அவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு எப்படி இருக்கிறது? என்ற கேள்விகளுக்கு விளக்கம் தருகிறார், விருதுநகர் - கிருஷ்ணாபுரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜ் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் டி.செல்வராஜ்.

''பொதுவாக, கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களில் ஆர்வம் இல்லாத மாணவர்கள் மூன்றாவது க்ரூப்பைப் பரிசீலிப்பார்கள். ஆனால், கணக்குப்பதிவியல் என்ற பாடம் இருப்பதால், அவர்களில் பலருக்கும் தயக்கம் இருக்கும். வழக்கமான கணிதத்துக்கும், கணக்குப்பதிவியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தப் பாடத்தில் கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகள் மட்டுமே துணைபுரியும். மற்ற எந்தக் கணக்குகளுக்கும் இதில் தொடர்பு இல்லை. 

வியாபார அமைப்புகள், பன்னாட்டு நிறுவனங்கள், அரசுத் துறை அமைப்புகள் என அனைத்து இடங்களிலும் வரவு - செலவு ஏடுகள் முறைப்படி பராமரித்து வர வேண்டும். இந்தக் கணக்குகளை முறைப்படி கணக்கேடுகளில் எழுதுவதற்கு சிறப்புத் தேர்ச்சியும், வியாபாரச் சட்டங்கள் சார்ந்த அறிவும் தேவை. அதைத்தான் கணக்குப்பதிவியல் மற்றும் வணிகவியல் பாடப் பிரிவுகள் சொல்லித்தருகின்றன.

இந்தப் பிரிவில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு பல முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. பி.காம், எம்.காம் போன்ற பட்டப்படிப்பில் பயின்று பட்டம் பெற்று, தொடர்புகொள்ளும் திறனை வளர்த்துக்கொள்பவர்களுக்கு, உள்ளூரில் தொடங்கி உலக நாடுகள் வரை உயர் பதவிகள் காத்திருக்கின்றன.

வணிகவியல் பிரிவில் கற்கும் திறமையுள்ள மாணவர்கள், சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., ஏ.சி.எஸ்.  போன்ற பட்டயப் படிப்புகளில் தேர்ச்சி பெற்று உயர் பதவிகளை வகிக்க முடியும். இந்தப் படிப்புகளுக்கு டாக்டர், இன்ஜினீயர் படிப்புகள்போல் அதிக செலவுகள் ஆகாது என்பது மற்றொரு சிறப்பு. பொருளியலும் முக்கியப் பாடமாக இருப்பதால், பிற்காலத்தில் போட்டித் தேர்வுகளில் அசத்த முடியும். நிர்வாகம், வணிகவியல் சார்ந்த துறைகளில் நாளுக்கு நாள் மாற்றங்கள் நிகழ்வதால், நீங்கள் ப்ளஸ்-2 முடிப்பதற்குள் இன்னும் புதுப்புது உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

எனவே, நீங்கள் க்ரூப்-1, க்ரூப்-2 பிரிவுகளில் சேர்வதற்குத் தேவையான அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், வணிகவியல், கணக்குப்பதிவியல் முதலான பாடங்களில் ஆர்வம் இருந்தால், தாராளமாக இந்தக் க்ரூப்பைத் தேர்வு செய்ய்யலாம். சமீபத்தில், சி.ஏ. தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தாரே... பிரேமா. அவரைப் போல் நீங்களும் அட்டகாசமான ஆடிட்டர் ஆகலாம்'' என்கிறார் செல்வராஜ்.

***
வெற்றி நிச்சியம்!
இலக்குகளை நிர்ணயித்துப் படித்தால், சமூகத்தில் உயரிய இடத்தைப் பிடிக்க வழிவகுப்பது க்ரூப்-IV.

வரலாறு, பொருளியல் மற்றும் புவியியல் ஆகிய பாடங்களைக்கொண்ட இந்த க்ரூப்பில் பொலிடிக்கல் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல், இங்கிலீஷ் ஃபார் கம்யூனிகேஷன்ஸ், எதிக்ஸ் அண்ட் இந்தியன் கல்ச்சர், அட்வான்ஸ்டு லாங்வேஜ் தமிழ் ஆகிய விருப்பப் பாடங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இந்தப் பிரிவைத் தேர்ந்தெடுக்கும்போது கவனத்தில்கொள்ள வேண்டியவைபற்றி சொல்கிறார், பெரம்பலூர் - பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், எஸ்.ஷேக் சலீம்.

''பொதுவாக, மிகக் குறைந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு இந்த க்ரூப் வழங்கப்படுகிறது. ஆனால், எதிர்காலத்தில் மிக உயர்ந்த நிலையை அடைவதற்கான அடித்தளம் இதிலே கிடைக்கும் என்பதையும் மனதில்கொள்ள வேண்டும். அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களும் தாராளமாக இந்த க்ரூப்பைப் பரிசீலிக்கலாம். தங்களுக்கான சரியான இலக்கை நிர்ணயித்துக்கொண்டு, அதையட்டிப் படித்து பல பேர் சாதித்து இருக்கிறார்கள்.

பொலிட்டிக்கல் சயின்ஸை விருப்பப் பாடமாகச் சேர்த்துப் படிப்பவர்கள், அரசியல் மற்றும் சட்டம் சார்ந்த படிப்புகளைப் படித்து, அந்தத் துறைகளில் சிறந்து விளங்க வாய்ப்புள்ளது. பொருளியல் சார்ந்த படிப்புகள் ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் உள்ளன. அருங்காட்சியகம் சார்ந்த பணிகள், சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் சார்ந்த படிப்புகள் என இந்த க்ரூப் மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. இளங்கலை, முதுகலை மற்றும் ஆசிரியர் படிப்புகளுக்கும் ஏற்றது இது.

மேலும், நம் பொது அறிவை வெகுவாக வளர்த்துக்கொள்ள வழிவகுக்கும் இந்தப் பிரிவில் சிறந்து விளங்கும் மாணவர்கள் கடுமையான முயற்சிகள் செய்தால், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். தேர்வுகளில் வெற்றியாளராக வலம் வர முடியும். இலக்கியம் மற்றும் இதழியலில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்களுடன் அடுத்த கட்டத்துக்குச் செல்லவும் உதவும். எனவே, தங்களது எதிர்காலத் திட்டத்தை வகுத்துக்கொண்டு, அதற்குப் பயன்படும் வகையில் இந்தப் பிரிவைப் பயன்படுத்துவது அவசியம்'' என்கிறார் ஷேக் சலீம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக