அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

தோப்புத்துறையின் 'சிங்கம்' சி.சா

தோப்புத்துறையின் 'சிங்கம்' சி.சா
( மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் வாட்ஸ் அப் அறிக்கை )
தோப்புத்துறையின் முகவரிகளில் ஒருவராக திகழ்ந்த ஜனாப் . சி . சாகுல் ஹமீது அவர்கள் இன்று இறைவனிடம் சேர்ந்திருக்கிறார் . ( இன்னா லில்லாஹி ... )

சிந்தா மரைக்காயர் குடும்பத்தின் மூத்த வாரிசாக தோப்புத்துறையில் அறிமுகமாகி , வேதாரண்யம் வட்டாரத்தையும் தாண்டி மாவட்டம் முழுக்க தனது அரசியல் பணிகளால் தன்னை வளர்த்துக் கொண்டார்.
திமுகவில் நீண்ட காலம் நகரச் செயலாளராக பணியாற்றியவர் , பின்னர் மதிமுகவுக்கு சென்ற போதும் அங்கும் அதே செல்வாக்கோடு திகழ்ந்தார் . பிறகு மீண்டும் திமுகவுக்கு திரும்பி அரசியல் பணிகளை முன்னெடுத்தார் .
அவர் திரு. மா . மீனாட்சி சுந்தரத்தின் 'மனசாட்சி' ஆக திகழ்ந்தார் .
திரு . மா.மீ அவர்களும் , சி.சா அவர்களும் , அமரர் செ. யூசுப் அவர்களும் முப்படை தளபதிகளாகவே வேதாரண்யம் பகுதிகளில் வலம் வந்தார்கள் .
திரு . மா.மீ அவர்கள் சி.சா இல்லாமல் எந்த வேலையும் செய்யமாட்டார் எனும் அளவுக்கு இருவரும் வாழ்நாள் நண்பர்களாக , குடும்ப உறவுகளாக வாழ்ந்தார்கள் .
அதேபோல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திரு . PVR அவர்களும் , அரசியலை தாண்டி சி.சா அவர்களை தனது குடும்ப நண்பராக பாவித்தார் .
வேதாரண்யத்தில் உள்ள பல்வேறு சமுதாய தலைவர்களும் , பிரமுகர்களும் தங்கள் குடும்ப நிகழ்ச்சிகளில் இவரை அழைத்து கொண்டாடினர் .
தோப்புத்துறையில் இந்துக்களும் , முஸ்லிம்களும் மதிக்கும் ஒருவராக அவர் வாழ்ந்து சென்றிருக்கிறார் . 
திமுகவின் சார்பில் நகராட்சி துணைத் தலைவராக அவர் இருந்தப்போதுதான் ஊர் முழுக்க தார் சாலைகளும் , சிமெண்ட் சாலைகளும் போடப்பட்டன. மின் விளக்குகள் ஒளிர்ந்தன . இதற்காக MSF -ன் வெள்ளிவிழா ஆண்டில் அவருக்கு கேடயம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது .
அவர் ஜமாத் மன்றத்தின் தலைவராக இருந்தபோது ஊரை கட்டுக்கோப்பாக வழிநடத்தினார் . அவரது துணிச்சல் , ஆளுமை , முடிவெடுக்கும் திறன் ஆகியவை என்றும் பேசப்படும் என்பதில் ஐயமில்லை .
ஆரம்ப காலங்களில் அவரோடு கருத்துவேறுபாடுகளும் , மோதல்களும் எங்களுக்கு இருந்தது. பிறகு எங்களின் உணர்வுகளை , சேவைகளை , நியாயங்களை புரிந்துக்கொண்டு முழு ஒத்துழைப்புகளை வழங்கினார் .
எனது அரசியல் , சமூக பணிகளை மனம் திறந்து பாராட்டுவார் . எல்லோரிடமும் பெருமையாக பேசுவார் . என்னை பார்த்ததும் மகிழ்ச்சியில் கட்டிப்பிடித்துக் கொள்வார் . நான் MLA - வாக வெற்றி பெற்றதும் , வீட்டுக்கு வந்து பாராட்டி மகிழ்ந்ததுடன் , வேதாரண்யம் முழுக்க அதை பெருமையாக பேசினார் .
கடந்த 1 மாதத்தில் அவர் உடல் நலம் குன்றிய நிலையில் 3 முறை வீட்டுக்கு சென்று பார்த்தேன் .
அவரது உடல் நிலையை பொருட்படுத்தாமல் , நான் உடல் நலம் குன்றியதை அறிந்து வீட்டுக்கு வந்து என்னை பார்த்து நலம் விசாரித்தார் .
அவரும் நானும் அமரர் ரெஜாக்‌ஷா அப்பா , அமரர் அகமது தம்பி அப்பா , அமரர் செ.யூசுப் அண்ணன் ஆகியோரோடு உரையாடி மகிழ்ந்த நாட்கள் நினைவிற்கு வருகிறது .
அவரது மறைவு தோப்புத்துறைக்கு மிகப் பெரிய இழப்பாகும் . ஒரு தலைமை சிங்கத்தை தோப்புத்துறை இழந்திருக்கிறது . அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து , அவரது மறுஉலக வாழ்வு சிறக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம் .
இவண்
M. தமிமுன் அன்சாரி MLA
12.06.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக