அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

விளையாடுங்க... வேலை கிடைக்கும்!


உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் விளையாட்டில் ஜொலிப்பவர்களுக்கு எந்தளவுக்கு முன்னுரிமை கிடைக்கிறது. விவரங்கள் தருகிறார், தர்மபுரியைச் சேர்ந்த முன்னாள் தடகள விளையாட்டு வீரரும் உடற்கல்வி ஆசிரியருமான கே.சி.மாதையன்.
''ஒரு கோடி, 50 லட்சம், 25 லட்சம்... இவைஎல்லாம் ஒலிம்பிக் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வெல்லும் இந்திய வீரர்களுக்கு அரசு தரும் ரொக்கப் பரிசு. இதுவே, ஆசிய விளையாட்டு போட்டியெனில் 25, 15 மற்றும் 10 லட்சங்களில் ரொக்கப் பரிசு மட்டுமே அமைந்திருக்கும். தவிர பிரதமர், ஜனாதிபதி, முதல்வர், கவர்னர், நாட்டின் மதிப்பு மிகுந்தவர்கள் என அனைவரும் அளிக்கும் பாராட்டுகள், தனியாரின் பரிசுகள், ஸ்பான்சர்ஷிப், விளம்பர ஒப்பந்தங்கள் என எந்தவொரு பாடமும், படிப்பும் தராத உயரத்தை விளையாட்டுப் போட்டிகளில் ஜெயிப்பதன் மூலம் எளிதில் பெறலாம்.

நம் நாட்டைவிட வறுமை தாண்டவமாடுகிற, வாய்ப்புகளும் இல்லாத ஆப்பிரிக்க நாடுகளில் ஆண்டுதோறும் சர்வதேச வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால், நம் நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கான வாய்ப்புகள் பற்றிய விழிப்பு உணர்வு இல்லாதது... துரதிர்ஷ்டமே!

மருத்துவப் படிப்பு, பொறியியல் படிப்பு மற்றும் ஏனைய கலை, அறிவியல் படிப்புகளில் 'ஸ்போர்ட்ஸ் ஸ்டூடன்ட்ஸ்’-க்கான இடஒதுக்கீட்டை அரசு நிர்ணயித்துள்ளது. தவிர, தங்கள் கல்லூரி பெயரில் விளையாட்டுகளில் பங்கேற்க வேண்டி, பள்ளியில் வென்ற ஸ்போர்ட்ஸ் பதக்கங்களோடு வரும் மாணவர்களை, மதிப்பெண் சற்றுக் குறைவாக பெற்றிருந்தாலும் முன்னணி தனியார் கல்லூரிகள் வாரிக் கொள்ளும். அவர்களே மேற்கொண்டு பயிற்சி, பங்கேற்பு என அனைத்திலும் துணை நிற்பதும் உண்டு.

இன்னொரு உபாயமாக, மாநிலம் முழுக்க அரசு செயல்படுத்தும் விளையாட்டு விடுதிகளில் சேர்த்து, அருகிலிருக்கும் பள்ளி, கல்லூரிகளில் விரும்பிய படிப்பைத் தொடரலாம். இதற்கு, ஓரளவுக்கு விளையாட்டுத் துறையில் திறமை மற்றும் ஆர்வத்தை சம்பந்தப்பட்ட மாணவர் நிரூபித்திருக்க வேண்டும். தங்குமிடம், உணவு, படிப்பு, விளையாட்டு உபகரணங்கள், பயிற்சி என அனைத்தையும் அரசே இலவசமாக வழங்குகிறது. மொட்டிலேயே விளையாட்டு நட்சத்திரங்களை அடையாளம் கண்டு கை தூக்கிவிடுவதற்கான ஏற்பாடு இது.

அடுத்ததாக, வேலை வாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கான முன்னுரிமையைப் பார்ப்போம். தமிழக காவல் துறை மட்டும் 10 சதவிகித வேலைவாய்ப்பு முன்னுரிமையை வழங்குகிறது. காவலர் பணிக்கான உடற்தகுதியில் பின் தங்குபவர்களுக்குக் கூட, விளையாட்டுச் சான்றிதழ்கள் வேலை வாங்கித் தந்து விடும். குறிப்பிட்ட விளையாட்டுத் திறமையின் அடிப்படையில் இந்திய ரயில்வே, பல்வேறு வங்கிகள் போன்றவை விளையாட்டு வீரர்களுக்கு வேலைகளை அள்ளித் தருகின்றன. இவர்கள் பெயருக்கு மட்டுமே வேலையில் இருப்பார்கள். தாங்கள் சார்ந்த நிறுவனத்துக்காக போட்டிகளில் பங்கேற்பதும், பரிசுகள் பெற்றுத் தருவதுமே இவர்களுடைய பணியாக இருக்கும்... நல்ல சம்பளத்துடன்!

மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்தின் வேலை வாய்ப்புப் பதிவில் இதற்கென இருக்கும் படிவங்களில் பதிவு செய்து கொள்வது அந்த வாய்ப்புகளை வசப்படுத்திக் கொள்ளும் வழி. எனவே, இப்போதிருந்தே பள்ளியிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் 'தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்' உருவாக்கியிருக்கும் மைதானங்களிலும் தேவையான பயிற்சி பெற நம்பிக்கையுடன் ஊக்குவியுங்கள்!''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக